அரச சேவைகளில் AI தொழில்நுட்பப் பயன்பாடு
மன்னார் மாவட்டச் செயலகத்தில் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (Digital & AI) தொழில்நுட்பங்களைப் பொதுத்துறையில் பயன்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகள் தொடர்பான அறிவுப் பகிர்வு நிகழ்வு இன்று (04) புதன்கிழமை நடைபெற்றது.
தேசிய உற்பத்தித்திறன் செயலகம் (National Productivity Secretariat), தூய்மையான இலங்கை செயலகம் (Clean Sri Lanka Secretariat) மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்டச் செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் காலை இந்நிகழ்வு இடம்பெற்றது.
பொதுத்துறையின் டிஜிட்டல் செயற்பாடுகளை வலுப்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களை அரச அலுவலகங்களின் அன்றாடப் பணிகளில் பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஊடாக அரச சேவைகளின் வினைத்திறன் மற்றும் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாட்டில் சிறந்த நடைமுறைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்பாகவும் இந்நிகழ்வு அமைந்தது.
குறித்த நிகழ்வில் தேசிய உற்பத்தித்திறன் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர், மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், திட்டமிடல் பணிப்பாளர், துறைசார் உயர் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பொதுத்துறையில் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவித்து, நவீன தொழில்நுட்பங்களின் ஊடாக அரச சேவைகளை மேலும் வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு வலியுறுத்தியது.

Comments 0
Be the first to comment.