அர்ஜுனா, ஹரிஸ் உள்ளிட்டோர் நீதிமன்றில் ஆஜர்!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட ஹிஜாப் பிரச்சினையைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட கருத்துகள் தொடர்பாக அவர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் உள்ளிட்ட ஆறு பேருக்கும், இரண்டு முகநூல் மற்றும் யூடியூப் தளங்களுக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ. தர்சினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
பிரதிவாதிகள் சார்பில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான 13 சட்டத்தரணிகள் மன்றில் ஆஜராகியிருந்ததுடன், பிரதிவாதிகள் சார்பில் காரணம் காட்டல்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
அதன் அடிப்படையில், சில பிரதிவாதிகளின் காரணம் காட்டல்களுக்காக வழக்கின் விசாரணை எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இன்றைய தினம் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர் முக்தார் நீதிமன்றத்தில் ஆஜராகி, நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடந்துகொள்வதாகவும், தம்மை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறும் கோரி விண்ணப்பம் சமர்ப்பித்திருந்தார்.
வைத்தியர் சுகுணன் சார்பில் சட்டத்தரணி கணகலிங்கம் கிஸோபனா நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

Comments 0
Be the first to comment.