இன்றைய வானிலை

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியின் மத்தியிலும் காணப்பட்ட தாழமுக்கம் தீவிரமடைந்து, பலமிக்க தாழமுக்கமாக மாறியுள்ளது.
இது மேற்கு நோக்கி நகர்வதுடன் மேலும் தீவிரமடைந்து இன்று ஒரு சூறாவளியாக விருத்தியடைகின்றது. இந்தச் சூறாவளி நாளையளவில் மேலும் தீவிரமடைந்து, மிகச் சக்திவாய்ந்த சூறாவளியாக வலுவடைந்து மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து, இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்திற்கும் விசாகப்பட்டினத்திற்கும் இடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூறாவளிக்கு வங்காளதேசத்தினால் முன்மொழியப்பட்ட “அர்ணாப்” என்ற பெயர் சூட்டப்படும்.
இந்தத் தாழமுக்கத் தொகுதி இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 1,300 கிலோமீற்றர் தொலைவில் காணப்படுகின்றது.
இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கங்கள் இல்லாதபோதிலும், நாட்டை ஊடறுத்துக் காற்று வீசுவதால் அடுத்துவரும் சில தினங்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் பலத்த மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இப்பிராந்தியங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும். நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும். எனவே, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு, இழப்புகள் மற்றும் சேதங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களுக்கான எச்சரிக்கை
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.
திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடல் பிராந்தியங்களிலும், மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களிலும் மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மறு அறிவித்தல் வரையில் கடல்சார் ஊழியர்களும் மீனவ சமூகத்தினரும் வங்காள விரிகுடாவின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளைக் கவனத்தில் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Comments 0
Be the first to comment.