—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ஊடக நட்புறவுச் சங்கத் தலைவராக மீண்டும் நிஸ்தார் காசிம்

இலங்கை - இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் 3ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தலைமையில் கொழும்பிலுள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் (28) புதன்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்தின்போது, சங்கத்தின் எதிர்வரும் ஆண்டுக்கான புதிய செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்தப் புதிய நிர்வாகக் குழுத் தெரிவின்போது, இலங்கை - இந்திய ஊடக நட்புறவுச் சங்கத்தின் தலைவராக நிஸ்தார் காசிம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக ஷெஹான் பரனகே, கலாணி குமாரசிங்க, ரிப்தி அலி, சந்தோஷ் மேனன், தினேஷ் டி அல்விஸ், அரோஷ பெர்னாண்டோ, ரொபேர்ட் அன்ரனி, தில்ருக்ஷி ஹதுன்னெத்தி, மகேஷ் பண்டார ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

நிகழ்வில் தலைமையுரையாற்றிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை மற்றும் இந்திய ஆகிய இரு நாட்டு ஊடக சமூகங்களுக்கு இடையிலான பரஸ்பர உறவையும் நன்மதிப்பையும் வலுப்படுத்துவதில் இந்தச் சங்கத்தின் பங்களிப்பைப் பெரிதும் பாராட்டியதுடன், செயற்குழுவின் எதிர்கால முயற்சிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

இந்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு விஜயம் செய்த இலங்கை ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து, இரு நாட்டு ஊடக உறவை மேம்படுத்தும் உயரிய நோக்கில் கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதம் இந்தச் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தொடங்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் ஊடக விழா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பயிற்சிப் பட்டறை, செய்தி ஆசிரியர்களின் வட்டமேசை மாநாடு மற்றும் தேர்தல் செய்தி சேகரிப்பு குறித்த கலந்துரையாடல்கள் எனப் பல முக்கிய நிகழ்வுகளை இந்தச் சங்கம் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.