ஒன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்ட 21 வெளிநாட்டவர்கள் கைது

நாட்டிலிருந்து இணையதளம் ஊடாக ஒன்லைன் நிதி மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வெளிநாட்டவர்கள் குழுவொன்று கொழும்பு, மருதானை டெக்னிக்கல் சந்தி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 12 சீனப் பிரஜைகளும், 6 பங்களாதேஷ் பிரஜைகளும், மூன்று இந்தியப் பிரஜைகளும் அடங்குகின்றனர்.
பொலிஸ் மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நடத்திய கூட்டுச் சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதானை டெக்னிக்கல் சந்திப் பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடிக் கட்டிடமொன்றில் இந்த மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய 21 வெளிநாட்டவர்கள் இதன்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்குழுவினர் குறித்த கட்டிடத்திலிருந்து முன்னெடுத்த ஒன்லைன் மோசடிகளின் தன்மை மற்றும் அவற்றின் வலையமைப்பு தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கவின் வழிகாட்டுதலில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச உள்ளிட்ட குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.