—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தமிழ் பேசும் மக்களுக்கு மனோவின் அரசியல் அறிவுரை

தமிழ் பேசும் மக்களுக்கு மனோவின் அரசியல் அறிவுரை

இஸ்ரேலில் வாழும் அரபுச் சிறுபான்மை மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தங்களது வாக்குகளைப் பயன்படுத்திய விதம், இலங்கையிலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மற்றும் அதன் அரசியல் தாக்கம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"இஸ்ரேலில் அரபுத் தலைமைகளின் கீழ் செயற்படும் இரு பிரதான அரசியல் கூட்டணிகள் தேர்தலில் போட்டியிட்டு, மொத்தமாக 19 நாடாளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன. இதன் மூலம் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத் தீர்மானங்களில் அரசியல் ரீதியாகப் பேரம் பேசக்கூடிய பலமிக்கத் தரப்பாகத் தங்களை அவர்கள் நிலைநிறுத்தியுள்ளனர்.

இஸ்ரேலில் ஜனாதிபதி ஆட்சி முறை கிடையாது. நாடாளுமன்றத்தின் ஊடாகவே பிரதமரும் அமைச்சரவையும் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி முன்னெடுக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலுடன் இதனை ஒப்பிட்டுப் பேசிய அவர்,

"இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நண்பர் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் அரசியல் அலைக்கு அடிபணிந்து வாக்களித்தனர்.

இதன் பரிதாபகரமான விளைவாக, இன்று பல தமிழ் பேசும் மாவட்டங்களில் தங்களால் தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் என்ன என்பது கூட மக்களுக்குத் தெரியாத அவல நிலையே காணப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில், இஸ்ரேலிய அரபுச் சிறுபான்மை மக்கள் அரசியல் தனித்துவத்துடன் தங்களது வாக்குகளைப் பயன்படுத்திய விதம், இலங்கைத் தமிழ் பேசும் சிறுபான்மையினருக்குக் கண் திறக்கும் பாடமாகும். நான் கூறுவதன் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்குச் சிந்திக்கும் ஆற்றல் அவசியம். இஸ்ரேலிய அரபு மக்களுக்கு எனது சலாம்" என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.