—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தீபாவளிக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுமா?

தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மலையகத்தில் குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் சமையல் எரிவாயுவைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் இராஜமணி பிரசாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொட்டகலை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (03) நடைபெற்றபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக சமையல் எரிவாயுவுக்குப் பாரிய தட்டுப்பாடு இல்லாவிட்டாலும், போதியளவு விநியோகம் இன்மையால் நுகர்வோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை நிலையங்களுக்கு வந்திறங்கியவுடன் விற்றுத் தீர்ந்துவிடுவதால், மக்கள் எரிவாயு ஏற்றிவரும் வாகனங்களுக்காகக் காத்திருப்பதுடன், மீண்டும் மீண்டும் வரிசைகளில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ள நிலையில், சமையல் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வது அவர்களின் பண்டிகைக் கொண்டாட்டங்களைப் பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளம் மற்றும் பண்டிகை முற்பணம் கிடைத்தாலும், பண்டிகைக்கான பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கு எரிவாயு கிடைக்காவிட்டால் மக்களால் மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, கொட்டகலை பிரதேச சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டுசென்று, எரிவாயு விநியோகத்தைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தித்வா புயலால் கொட்டகலை பிரதேசத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இம்மாத இறுதிக்குள் பயன்படுத்தி, அதற்கான கணக்கு விபரங்களைச் சமர்ப்பிக்குமாறும் பிரதேச சபை உறுப்பினர்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலதாமதம் ஏற்படுமானால் ஒதுக்கப்பட்ட நிதி திறைசேரிக்குத் திரும்பிச் செல்லக்கூடிய நிலை ஏற்படும் என்பதால், உரிய திட்ட முன்மொழிவுகளை விரைவாகச் சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.