அநுர அரசிடம் சஜித் அணி கேள்வி

நீதிமன்றங்களில் சட்டரீதியாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள், பொலிஸ் நிலையங்களிலும் சிறைச்சாலைகளுக்குள்ளும் தீர்க்கப்படும் அச்சுறுத்தலான நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது.
பொலிஸ் காவலில் பதிவாகும் மரணங்கள் தொடர்பில் அநுர அரசு தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா வலியுறுத்தினார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (29) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கண்டனக் கருத்துகளை முன்வைத்தார்.
ஹோமாகம பொலிஸ் நிலைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் உ**யிரிழந்த சம்பவம் குறித்துச் சுட்டிக்காட்டி உரையாற்றிய அவர்,
"ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் உ**யிரிழந்த சம்பவம் நாட்டில் பெரும் சர்ச்சையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில், இந்நபரின் மரணத்துக்கு உடல்நலக்குறைவே காரணம் என அரச தரப்பால் தெரிவிக்கப்பட்டது.
எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதல்களால் நரம்புகளும் எலும்புகளும் கடுமையாகச் சேதமடைந்தமையினாலேயே மரணம் சம்பவித்துள்ளது என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்றதொரு சந்தேகத்துக்கிடமான மரணச் சம்பவம் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிலும் பதிவாகியுள்ளது" என்றார்.
நாட்டில் தற்போது சிவில் உரிமைகளை முடக்கும் அடக்குமுறை ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று குற்றம்சாட்டிய அவர்,
"கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, 'பொலிஸ் காவலில் உள்ள நபர் ஒருவர் உ**யிரிழந்தால் அதற்கு அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்' என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.
அவர் ஆட்சிப்பீடமேறி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஹோமாகம மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் காவல் மரணங்கள் தொடர்பில் அவரின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்பதை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மேடைகளில் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுவதை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றார்.

Comments 0
Be the first to comment.