—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இரு சட்டமூலங்களுக்கு கடும் எதிர்ப்பு

இரு சட்டமூலங்களுக்கு கடும் எதிர்ப்பு

அரசால் முன்மொழியப்பட்டுள்ள 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' மற்றும் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்' ஆகியன மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் அடியோடு ஒடுக்குவதற்கே பயன்படுத்தப்படும் என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கண்டனக் கருத்துகளை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"புதிதாக அரசு கொண்டுவரவுள்ள இரண்டு சட்டமூலங்களும் நிறைவேற்று அதிகாரத்துக்கும், பொலிஸாருக்கும், பாதுகாப்புத் துறையினருக்கும் முற்றுமுழுதான வரம்பற்ற அதிகாரங்களை வழங்குகின்றன.

இதுவரை காலமும் சுயாதீன நீதிமன்றங்களின் அதிகார வரம்புக்குள் இருந்த பல விடயங்களை நிறைவேற்று அதிகாரத்திடம் ஒப்படைக்கும் வகையிலேயே இந்தச் சட்டமூலங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலத்தில் குற்றங்கள் தொடர்பான வரையறைகள் மிக விரிவாகவும் தெளிவற்றதாகவும் உள்ளன. பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல், திருட்டு, அறிவுசார் சொத்துரிமை மீறல் மற்றும் சட்டவிரோத சூதாட்டம் போன்றவை கூட இதன் கீழ் உள்ளடக்கப்படலாம்.

மேலும், ஒருவரின் ஆடை, சைகைகள், மொழிப் பயன்பாடு அல்லது உடலில் உள்ள பச்சை குத்திய அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகத்தின் பேரில் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது" என்றார்.

புதிய சட்டமூலத்தின் ஆபத்தான பிரிவுகள் குறித்து மேலும் விளக்கிய அவர்,

"இந்தச் சட்டமூலத்தின் கீழ் சந்தேகநபர் ஒருவரை 72 மணித்தியாலங்கள் வரை பொலிஸ் காவலில் வைத்திருக்கவும், அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை தடுத்து வைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிணை வழங்குவதற்கான நீதிவானின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொலிஸாரிடம் வழங்கப்படும் வாக்குமூலங்களைச் சான்றாகப் பயன்படுத்துதல் போன்ற ஏற்பாடுகள் கடுமையாகக் கவலைக்குரியவை.

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் பெயரில் தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாய அமைப்புகளின் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் நியாயமான போராட்டங்கள் முடக்கப்படும்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்ட அரசின் பொறுப்பு வாய்ந்தவர்கள் இது குறித்து நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்கமளிக்க வேண்டும்.

இந்தக் கொடூரமான இரண்டு சட்டமூலங்களையும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவர வேண்டாம் என அரசைக் கேட்டுக்கொள்கின்றோம். மீறி கொண்டுவரப்பட்டால் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளை ஒன்றிணைத்துப் போராடி அவற்றைத் தோற்கடிப்போம்" என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.