—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அநுர அரசைச் சாடிய சுரேன் ராகவன்

அநுர அரசைச் சாடிய சுரேன் ராகவன்

காணாமல்போன 23 கொள்கலன்கள் தொடர்பில் கண்டறிவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்படுவதைக் கடுமையாக விமர்சித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சுரேன் ராகவன், நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், அரசின் செயற்பாடுகள் கவலைக்குரியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

காணாமல்போன 23 கொள்கலன்கள் தொடர்பில் கண்டறிவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், வரவிருக்கும் மூன்று போயா தினங்களின்போதான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனதான் என்பதைத் தாங்கள் நன்கறிந்திருந்தபோதிலும், அவர்கள் மீது எவ்வித கோபமும் கொள்ளவில்லை எனவும் சுரேன் ராகவன் கூறினார்.

அரசின் ‘சட்டத்தின் ஆட்சி’ குறித்த வாக்குறுதியை விமர்சித்த அவர், அனைவருக்கும் சட்டம் சமமானது என்று ஜனாதிபதியால் இனிமேலும் கூற முடியாது எனத் தெரிவித்தார்.

இதேவேளை, சிறைச்சாலையில் உள்ள பௌத்த பிக்குகளின் சட்ட நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட ஏனைய பிக்குகள் சிறையிலிருந்து வெளியேறும்போது காவி உடையை அணியும் வகையில் 48 மணி நேரத்துக்குள் அரசு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தமைக்குத் தமது நன்றியையும் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார மேலாண்மை முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், குத்தகைக் கொடுப்பனவு (லீசிங்) வசதிகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான கடன்களுக்கு இன்னமும் அதிக வட்டி விகிதங்கள் வசூலிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

நாட்டின் பொருளாதாரம் இவ்வாறானதொரு கடினமான சூழ்நிலையில் இருக்கும்போதே, அமர்ந்து பயணிப்பதற்கான வாகனங்கள் பழுதடைந்துள்ளதால் 1,750 புதிய வாகனங்களைக் கொண்டுவர வேண்டும் என ஜனாதிபதி மூன்று முறை வலியுறுத்தியுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசால் முன்மொழியப்பட்டுள்ள ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’, நாட்டின் வரலாற்றில் உருவாக்கப்படவுள்ள மிகவும் ஆபத்தான மற்றும் ஜனநாயக விரோதமான சட்டமாக மாறவுள்ளதாகவும் அவர் எச்சரித்தார். அத்துடன், நாட்டின் நிலக்கரி இருப்புக்கள் முடிவடையும் நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் 750 பௌத்த பிக்குகளைச் சந்தித்து அவர்களின் வாழ்வியல் முறைகள் குறித்துக் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையைப் பொறுத்தவரையில் பிக்குகள், சாசனம் மற்றும் அரசு ஆகிய மூன்றும் தனித்தனியானவை அல்ல என்றும், அவை ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட ஒரே அங்கமாக உள்ளன என்றும் மேலும் தெரிவித்தார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.