‘கபூர் மாமா’வுக்கு 12 ஆண்டுகள் சிறை

வண்ணாத்திவில்லு – லக்டோவத்த பகுதியில் வெடிபொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருள்களைச் சேமித்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான, ‘கபூர் மாமா’ என அழைக்கப்படும் மொஹமட் ஷரீப் ஆதம் லெப்பைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர நீதாய மேல்நீதிமன்றம் இன்று (28) தீர்ப்பளித்துள்ளது.
தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும் பிரதிவாதி நீதிமன்றில் ஒப்புக்கொண்டதை அடுத்து, மேல்நீதிமன்ற நீதிபதிகளான லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசிங்க ஆகியோரைக் கொண்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
பிரதிவாதிக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தலா 12 ஆண்டுகள் வீதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோதிலும், அந்தத் தண்டனைகளை ஒரே காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது. அதற்கமைய, அவரது மொத்தச் சிறைத்தண்டனைக் காலம் 12 ஆண்டுகளாக அமையும்.
மேலும், பிரதிவாதி இதுவரை விளக்கமறியலிலும் தடுப்புக் காவலிலும் கழித்த ஏழரை ஆண்டுகளைத் தண்டனைக் காலத்திலிருந்து கழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, அவர் மேலும் சுமார் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணைகளை மேலும் நீடிக்காமல் குற்றத்தை ஒப்புக்கொண்டமை, அவரது வயது மற்றும் ஏனைய விசேட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டே நீதிபதிகள் இந்தச் சலுகையுடனான தண்டனைத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இதேவேளை, ‘கபூர் மாமா’வுக்கு எதிராகக் கேகாலை மற்றும் மட்டக்களப்பு மேல்நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள இரு வழக்குகளுக்காக அவர் அழைத்துச் செல்லப்படும்போது, அவருக்கு உரிய விசேட பாதுகாப்பை வழங்குமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் சட்டமா அதிபரால் ஆறு பிரதிவாதிகளுக்கு எதிராக 13 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவர்களில் ஐந்து பிரதிவாதிகள் ஏற்கெனவே குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments 0
Be the first to comment.