—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அம்பாறையில் அவசர நடவடிக்கை

எதிர்வரும் பருவமழை மற்றும் அனர்த்த காலங்களை முன்னிட்டு, அம்பாறை மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்கும் வகையில் உடனடித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் பருவமழைக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்காலத்தில் கடும் மழை, வெள்ளப்பெருக்கு, கடல் கொந்தளிப்பு, பலத்த காற்று மற்றும் சூறாவளி போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது அவசியமாகியுள்ளது.

வீதியோரப் பாரிய மரங்களை அகற்றுதல்

கல்முனை, நாவிதன்வெளி, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வீதியோரங்களில் அமைந்துள்ள பாரிய ஆலமரங்கள், மருத மரங்கள் மற்றும் காயா மரங்கள் போன்ற ஆபத்தான மரங்களை உரிய முறையில் வெட்டி அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறான பாரிய மரங்கள் திடீரென முறிந்து விழுந்ததால், பல மணிநேரம் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டதுடன், மரங்களை அகற்றுவதற்கும் நாள்கணக்கில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், மின்கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் பல நாட்களுக்கு மின்சார விநியோகம் தடைப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும், சில இடங்களில் இத்தகைய சம்பவங்களால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடிகான்களைத் துப்புரவு செய்தல்

மழைக்காலங்களில் நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், பிரதான வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளை அண்டியுள்ள வடிகான்களை உரிய முறையில் துப்புரவு செய்ய வேண்டும்.

கல்முனை, நாவிதன்வெளி, அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் வடிகான்கள் தூர்வாரப்படாமல் காணப்படுவதால், மழைநீர் வடியாமல் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

எனவே, எதிர்வரும் அனர்த்த அபாயங்களிலிருந்து பொதுமக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட அரச மற்றும் உள்ளூராட்சி திணைக்களங்கள் உடனடியாக ஒன்றிணைந்து வீதியோரங்களில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றுதல் மற்றும் வடிகான்களைத் துப்புரவு செய்தல் போன்ற பணிகளைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.