ஜனநாயகம் குறித்து மொட்டு கட்சி சாடல்

அரசுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்குவதற்காகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டு, பொலிஸ் இராஜ்யத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது மக்களின் சிந்தனைச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் மற்றும் தொழில் செய்யும் சுதந்திரம் ஆகியவை முற்றாக முடக்கப்படும் அபாயகரமான நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் சாடினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொலிஸ்மா அதிபர் எவ்வித தயக்கமுமின்றி அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றார். கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமையால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிஹிந்தலை தேரரிடம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நாகரிகமற்ற வார்த்தைகளால் பேசியமை தொடர்பாக அரச தரப்பிலிருந்து எந்தவொரு கண்டனமும் தெரிவிக்கப்படாமை, பௌத்த மதத்துக்கு ஏற்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தலையே காட்டுகின்றது.
அரசை விமர்சித்து எழுதப்படும் பாடல்களை எழுதியவர்களையும், அவற்றுக்காக வாக்குமூலம் அளித்த சட்டத்தரணிகளையும் பொலிஸார் விசாரணைக்கு அழைத்து அச்சுறுத்துகின்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவான பாடல்களைக் கேட்பதற்கு அனுமதி இருக்கும்போது, அரசுக்கு எதிரான பாடல்களையும் தொலைபேசி நிறுவனங்கள் ஊடாக ‘ரிங்டோன்’ ஆகப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் அரச சொத்துக்களை அழித்து, பேருந்துகளை எரித்து, வங்கிகளைக் கொள்ளையடித்த ஜே.வி.பி. தரப்பினருக்கு அரசியலில் ஈடுபட ஜனநாயக உரிமை வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசின் 2.05 பில்லியன் டொலர் இழப்பு, 300 கொள்கலன் விவகாரம் மற்றும் நிலக்கரி ஊழல்கள் தொடர்பான விடயங்களை மறைக்கவே முயற்சிகள் இடம்பெறுகின்றன.
தமது நியாயமான உரிமைகளுக்காகத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களைப் ‘பயங்கரவாதிகள்’ என முத்திரை குத்துவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது.
சிறையிலுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரின் விடுதலைக்காகப் பௌத்த துறவிகள் முன்னெடுக்கும் போராட்டத்துக்குத் தடை கோரி பொலிஸார் நீதிமன்றம் செல்வது கேலிக்கூத்தானது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது மன்னிப்பை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய ஜனாதிபதியால் தீர்வு வழங்க முடியும்” என்றார்.

Comments 0
Be the first to comment.