இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் மழை பெய்யும் வாய்ப்பு!
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள "முரசு" சூறாவளி மேலும் தீவிரமடைந்து, மிகப் பலமிக்க சூறாவளியாக வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறித்த சூறாவளி காங்கேசன்துறையிலிருந்து வடக்கு - வடகிழக்குத் திசையில் சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 11.30 மணியளவில் நிலைகொண்டிருந்தது.
இது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்வதுடன், அடுத்துவரும் மூன்று மணித்தியாலங்களில் வங்காள விரிகுடாவின் மேற்குப் பகுதியின் மத்தியில் மிகப் பலமிக்க சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னர் வடமேற்குத் திசையில் நகர்ந்து, தென் ஆந்திரப் பிரதேசக் கரையின் நெல்லூருக்கும் நாசப்பூருக்கும் இடையில் இன்று நள்ளிரவுக்கும் நாளை அதிகாலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் கரையைக் கடக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை மீனவ சமூகத்தினரும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைக் கவனத்திற்கொண்டு செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம்.
கடல் பிராந்தியங்களின் வானிலை
நாட்டைச் சூழவுள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையிலிருந்து அல்லது தென் திசையிலிருந்து காற்று வீசும்.
சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 45 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேலும், கடல் பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று வீசக்கூடும். அச்சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Comments 0
Be the first to comment.