—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இலங்கைக் கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

இலங்கைக் கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவான 'அர்னாப்' சூறாவளி தீவிர புயலாக வலுவடைந்து வருவதால், இலங்கையைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் கரையை அண்டிய பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை மையத்தால் 'சிவப்பு எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றுப் பிற்பகல் 2.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து வடகிழக்கே சுமார் 1,050 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்தச் சூறாவளி, மேலும் தீவிரமடைந்து இன்று தீவிர புயலாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன்பின்னர், இது நாளை முற்பகல் 11.30 மணியளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரைப்பகுதியைக் கடந்து செல்லும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

குறிப்பிட்ட அபாயகரமான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், பலத்த இடிமின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

கடற்பகுதிகளில் அலைகள் 3.0 முதல் 4.0 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

வட அகலாங்கு 10°–20° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 80°–95° இடைப்பட்ட கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்பயணங்களில் ஈடுபடும் சமூகத்தினர், மறு அறிவித்தல் வரை அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முற்றாகத் தவிர்த்து, உடனடியாகப் பாதுகாப்பான இடங்களைச் சென்றடையுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

கொழும்பு முதல் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பொத்துவில், மட்டக்களப்பு ஊடாக முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அப்பகுதிகள் கொந்தளிப்பாக இருக்கும்.

புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கரையை அண்டிய கடற்பகுதிகளில் அலைகள் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.

இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் வீசும் காற்றின் வேகம் தற்காலிகமாக மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.