உயிருக்குப் போராடும் யானைக்கு என்ன ஆனது?
வயல் பகுதியில் உயிருக்குப் போராடி வரும் காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு மருத்துவப் பிரிவினரால் தீவிர மருத்துவச் சிகிச்சை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சேகப்பற்று பகுதியிலுள்ள வயல் பகுதியில் கடந்த புதன்கிழமை (21) சுமார் 15 வயது மதிக்கத்தக்க காட்டு யானை சுகயீனமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் வளத்தாப்பிட்டி களப் பாதுகாப்புப் படைப் பிரிவு அலுவலகத்தின் பொறுப்பதிகாரி எம்.ஜி. அஜித் குணரத்ன விடுத்த அவசரக் கோரிக்கைக்கு அமைவாக, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் குறித்த யானைக்கான சிகிச்சை மற்றும் மீட்புப் பணிகளுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, பாதிக்கப்பட்ட யானைக்குத் தடையின்றி அவசரச் சிகிச்சைகளை வழங்குவதற்குத் தேவையான கூடார வசதிகளும், யானையை மீட்கும் பணிகளுக்கான கனரக வாகன வசதிகளும் சம்மாந்துறை பிரதேச சபையினால் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
வயல்வெளியின் சேற்றுப் பகுதியில் எழ முடியாமல் வீழ்ந்து கிடக்கும் இந்த யானையின் உயிரைப் பாதுகாத்து, அதனை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்காக வனவிலங்கு மருத்துவக் குழுவினர் வியாழக்கிழமை (22) முதல் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று தீவிர சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.