—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம் குறித்து சஜித் குற்றச்சாட்டு

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருள் கிடைப்பதில்லை எனவும், மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்பதாகக் கூறிவிட்டு தற்போது மீண்டும் அதனை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

பொலன்னறுவை மாவட்டம், பொலன்னறுவைத் தொகுதி, அரலகங்வில வட்டாரத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலங்கள் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீறப்படுகின்றன.

பௌத்த மதத்துக்குரிய சிறப்பிடமும் மதத் தலைவர்களின் காவி உடைக்குரிய மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். பிக்குகளின் காவி உடையைக் களையச் செய்தமை போன்ற தவறுகளை அரசு செய்துள்ளது.

நெல்லுக்கு 150 ரூபாய் நிலையான விலை வழங்குவதாகக் கூறிவிட்டு விவசாயிகளை அரசு ஏமாற்றியுள்ளது. உற்பத்திச் செலவுக்கேற்ப நியாயமான விலை கிடைக்காததால் விவசாயக் குடும்பங்கள் நிர்க்கதியில் தவிக்கின்றன.

எதிர்க்கட்சியில் இருந்தபோது அரிசி இறக்குமதியை எதிர்த்தவர்கள், தற்போது ஆட்சிக்கு வந்ததும் பல இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்து தரகுப் பணம் பெறுகின்றனர்.

நெதர்லாந்து போன்ற நாடுகளின் நவீன தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி, தேசிய விவசாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி 'ஸ்மார்ட் விவசாயியை' உருவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.