—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன – தயாசிறி குற்றச்சாட்டு

ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன – தயாசிறி குற்றச்சாட்டு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, இலங்கை தற்போது திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாதுகாப்புத் துறையினருக்கு இருந்த கைது செய்யும் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கும் ஏனைய சில நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை ஒரு வருடம் வரை தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரமும் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

அரசு ஜனநாயக உரிமைகளை முடக்கி, நாட்டை இராணுவமயமாக்கல் நோக்கியும் பொருளாதார நெருக்கடியை நோக்கியும் தள்ளி வருகின்றது. குற்றத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டமூலங்கள் மூலம் நாடு ஒரு இராணுவ இராச்சியமாக மாற்றப்பட்டு வருகின்றது.

பாதுகாப்புத் துறையினருக்கு இருந்த கைது செய்யும் அதிகாரங்கள் இராணுவத்தினருக்கும் ஏனைய சில நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களை ஒரு வருடம் வரை தடுப்புக் காவலில் வைக்கும் அதிகாரமும் பாதுகாப்புச் செயலாளருக்கு வழங்கப்பட்டு நாடே ஒரு வெளிப்படையான சிறைச்சாலையாக மாறியுள்ளது.

கடந்த காலங்களில் வீதிகளை மறித்துத் தொடர்ச்சியாகப் போராடியவர்களே இன்று மக்களின் போராட்ட உரிமைகளை நசுக்கி வருகின்றனர். சர்வதேச மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் கேள்விகளையும் அரசு பொருட்படுத்தவில்லை.

தனியார் துறை விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து அரசும் எரிபொருள் விலையை அதிகரித்து வருகின்றது. கோதுமை மா மற்றும் பாண் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உயர்த்தப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் விலையேற்றத்தின்போது வரியைக் குறைக்க வேண்டும் என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு 12 தடவைகளுக்கும் மேலாக வரிகளை அதிகரித்து மக்கள் மீதான சுமையை உயர்த்தியுள்ளனர்.

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடிகள் குறித்து ஆராய விசேட நாடாளுமன்றக் குழுவொன்றைக் கோரிய போதிலும் சபாநாயகர் அதற்கு அனுமதியளிக்கவில்லை.

எதிர்காலத்தில் சிறைச்சாலைகளில் ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அரசின் கைப்பாவையாகச் செயற்படும் சபாநாயகரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.