ஓரியோனிட்ஸ் விண்கல் மழை

இலங்கையில் ஓரியோனிட்ஸ் விண்கல் மழையை வெற்றுக் கண்களால் காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாக மொரட்டுவையில் அமைந்துள்ள ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் இந்த வானியல் நிகழ்வை இலங்கையிலிருந்து சிறப்பாகக் காண முடியும் என மையம் குறிப்பிட்டுள்ளது.
ஹேலியின் வால்நட்சத்திரம் சூரிய மண்டலத்தைக் கடந்து செல்லும்போது விட்டுச் செல்லும் தூசு மற்றும் சிறிய பாறைத் துகள்களால் ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதத்தில் ஓரியோனிட்ஸ் விண்கல் மழை ஏற்படுகிறது.
இந்தத் துகள்கள் வினாடிக்கு சுமார் 66 கிலோமீற்றர் வேகத்தில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து எரியும்போது, வானில் பிரகாசமான ஒளிக்கோடுகள் தோன்றுகின்றன. இவ்வாறான காட்சியே விண்கல் மழையாகக் காணப்படுகிறது.
நள்ளிரவுக்குப் பின்னர், குறிப்பாக விடியற்காலைக்கு முன்னர், வானம் தெளிவாக இருக்கும் சந்தர்ப்பங்களில் இந்த விண்கல் மழையை மிகவும் தெளிவாகக் காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
இந்த வானியல் நிகழ்வைக் காண விசேட தொலைநோக்கிகள் அல்லது அதிநவீன உபகரணங்கள் தேவையில்லை. வானிலை சாதகமாக இருக்கும் பட்சத்தில், பொதுமக்கள் வெற்றுக் கண்களாலேயே ஓரியோனிட்ஸ் விண்கல் மழையைப் பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments 0
Be the first to comment.