சீரற்ற வானிலை பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 20 மாவட்டங்களில் உள்ள 183 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 2,106 குடும்பங்களின் 7,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை (19) வரையிலான நிலவரப்படி, சீரற்ற வானிலையால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கனமழை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக 26 வீடுகள் முழுமையாகவும், 1,390 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. இதேவேளை, 13 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் இரண்டு பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 41,725 குடும்பங்களைச் சேர்ந்த 137,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அம்பாறை, அனுராதபுரம், பதுளை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், மன்னார், மாத்தளை, மொனராகலை, முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் வவுனியா ஆகிய 12 மாவட்டங்களில் உள்ள 30 பிரதேச செயலகப் பிரிவுகளில் வறட்சியின் தாக்கம் பதிவாகியுள்ளது.
மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 26 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 32,688 குடும்பங்களின் 110,174 பேருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Comments 0
Be the first to comment.