கட்டுப்பாடின்றித் திரியும் மாடுகள்: விபத்து அபாயம்!
அம்பாறை மாவட்டம், கல்முனை மாநகரின் பிரதான வீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தைக் கட்டடப் பகுதிகளில் மாடுகள் கட்டுப்பாடின்றித் திரிவதால், பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் தொடர்ச்சியாகப் பல்வேறு சிரமங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
நகரின் பிரதான வீதிகளில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி உலா வரும் இக்கால்நடைகளால் கடந்த காலங்களில் பல வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், பல பயணிகள் காயமடைந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நகர வீதிப் பாதுகாப்பையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் அச்சுறுத்தும் இப்பாரிய பிரச்சினை தொடர்பாகப் பல தடவைகள் கல்முனை மாநகர சபையின் நிர்வாகத்திற்குப் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களால் எழுத்துமூலமாகவும் நேரடி முறையீடுகள் மூலமாகவும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், இதுவரை மாநகர சபையினால் எவ்விதத் தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்கப்படாதிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
"பொதுமக்களின் முறைப்பாடுகளை வெறும் எழுத்துக்களாகப் பெறாமல், அவற்றுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதே ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் முதன்மையான கடமையாகும்.
மக்களின் பாதுகாப்பையும் போக்குவரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் இந்தப் பிரச்சினைக்குத் இதுவரை தீர்வு காணப்படாவிட்டால், கல்முனை மாநகர சபையின் பொறுப்பு என்ன?" என நகரவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
மாநகர சபை நிர்வாகத்திற்குப் பலமுறை இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இனிமேலும் பாரிய விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படும் வரை அதிகாரிகள் காத்திருக்கப்போகிறார்களா? எனக் கேள்வி எழுப்பும் பொதுமக்கள், இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, பிரதான வீதிகளிலும் சந்தைப் பகுதிகளிலும் திரியும் மாடுகளின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்குக் கடுமையான தண்டப்பணங்களை விதித்தல், மாடுகளைக் கைப்பற்றிப் பட்டியில் அடைத்தல் போன்ற சட்ட நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுத்து, வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்முனை மாநகர சபை அவசரமாகச் செயற்பட வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Comments 0
Be the first to comment.