—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கல்வியால் ஆளுமையை உயர்த்த சுமந்திரன் வலியுறுத்தல்

கல்வியால் ஆளுமையை உயர்த்த சுமந்திரன் வலியுறுத்தல்

இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருப்பதால் எதிர்கொள்ளும் சவால்களை ஈடுசெய்ய, கல்வியின் ஊடாகவே தமது ஆளுமையையும் திறமைகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் பாஸ்கரனின் ஏற்பாட்டிலும் தலைமையிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் சாதனையாளர் விழா நேற்று (29) வியாழக்கிழமை காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுமந்திரன் எம்.பி.,

"இலங்கையின் பாடசாலைக் கல்வித் திட்டத்தில் பாரிய மறுசீரமைப்பு அவசியமாக உள்ளது.

கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்படவிருந்த கல்வி மறுசீரமைப்புத் திட்டம் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்துள்ளது. அது விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

ஆரம்பப் பாடசாலை நிலை முதலே மாணவர்களை இன்றைய நவீன உலகின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும், எதிர்காலத் தொழில் வாய்ப்புகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் தயார்படுத்தும் வகையில் கல்வி முறைமை மாற்றியமைக்கப்பட வேண்டும்.

எண்ணிக்கையின் அடிப்படையில் நமக்கு ஏற்படும் குறைபாடுகளையும் பின்னடைவுகளையும் கல்வியின் மூலமே ஈடுசெய்ய முடியும். கல்வியில் முன்னேற்றமடைவதன் மூலம், நாட்டின் முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளும் உயர்மட்டப் பொறுப்பு வாய்ந்த இடங்களில் எமது மக்களும் பங்கேற்கும் வாய்ப்புகள் உருவாகும்.

முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பில் 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இல்லாது போகலாம் என நம்புகின்றேன். மிகச் சிறிய வயதிலேயே மாணவர்களுக்குப் பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் இந்தப் பரீட்சை அவசியமற்றது என்ற கருத்தைக் கொண்டவர்களில் நானும் ஒருவன்.

இருப்பினும், இத்தகைய அழுத்தங்களையும் தாண்டிச் சாதனை படைத்த மாணவர்களை நாம் பாராட்ட வேண்டும். அதேவேளை, இந்தப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களையும் தோல்வியடைந்தவர்களாகக் கருதக்கூடாது.

பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களின் முயற்சியும் பாராட்டத்தக்கது.

மாணவர்களின் எதிர்காலத்தை ஒரேயொரு பரீட்சையின் பெறுபேற்றைக் கொண்டு மட்டும் தீர்மானிக்காமல், அவர்களின் தனித்துவமான திறமைகளையும் ஆளுமைகளையும் அடையாளம் கண்டு வளர்ப்பதற்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன்வர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.