—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அடக்குமுறைச் சட்டங்கள் குறித்து கடும் எச்சரிக்கை

அடக்குமுறைச் சட்டங்கள் குறித்து கடும் எச்சரிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை மீறி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மோசமான அம்சங்களைக் கொண்ட அடக்குமுறைச் சட்டங்களையே மீண்டும் கொண்டுவருவதாகச் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்' மற்றும் 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' ஆகியன தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

வாக்குறுதி மீறல்

"2024ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச் செய்வதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி மக்களின் சிவில் உரிமைகளை உறுதிசெய்வதாகவும் வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் இரண்டும் பழைய சட்டத்தின் மிக மோசமான மீறல்களையே மீண்டும் பிரதிபலிக்கின்றன.

சித்திரவதைகளுக்கான வழிவகை

போதிய நீதித்துறை மேற்பார்வையோ அல்லது தெளிவான சான்றுகளோ இன்றி நீண்டகாலத் தடுப்புக்காவலுக்கு இப்புதிய சட்டமூலங்கள் இடமளிக்கின்றன. மேலும், பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்களைச் சான்றாகப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதன் மூலம் பொலிஸ் சித்திரவதைகள் தொடர்வதற்கு அரசே வழிகோலுகின்றது.

சட்டப் பாதுகாப்புகள் நீக்கம்

சர்வதேச நியமங்களான தெளிவு மற்றும் சட்டபூர்வ ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தத் தவறியுள்ள இந்தச் சட்டமூலங்கள், நாட்டின் சாதாரண குற்றவியல் சட்டத்தின் அடிப்படைப் பாதுகாப்புகளையும் நீக்கியுள்ளன.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகைக்கு ஆபத்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கான முதன்மை நிபந்தனைகளில் ஒன்றாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது காணப்படுகின்றது.

எனினும், அந்தச் சட்டத்தின் கடுமையான அம்சங்களைத் தொடர்ந்து தக்கவைத்துள்ள புதிய 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்', ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பலவீனப்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆதலால், முறையான கலந்தாலோசனைகள் இன்றி அவசரமாக வரைவு செய்யப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டமூலங்களை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.