—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

காணாமல் போனோர் குடும்பங்களுக்கு கொடுப்பனவு

இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல், இன்று (04.11.2026) மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, இழப்பீட்டு அலுவலகத்தினால் இழப்பீடு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் புதிய விண்ணப்பங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ். மோகனபவன், பிரதேச செயலாளர்கள், இழப்பீட்டு அலுவலகத்தின் மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இழப்பீடு வழங்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தெரிவிக்கையில்,

சொத்தழிப்புக்கான கொடுப்பனவுகள்:

இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் 12,546 குடும்பங்கள் சொத்தழிப்புக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

மீண்டும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு:

உச்சநீதிமன்றத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, இதுவரை இக்கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது 10,800 குடும்பங்கள் மீண்டும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுள்ளனர். அவர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்து, கிராம சேவையாளர்கள் ஊடாகப் பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காணாமல் போனோர் குடும்பங்களுக்கான கொடுப்பனவு:

மாவட்டத்தில் காணாமல் போனோர் குடும்பங்களாக 1,225 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 685 பேருக்கு காணாமல் போனோருக்கான 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

வன்செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு:

வன்செயல்கள் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் கடுங்காயமடைந்தவர்கள் என மாவட்டத்தில் இதுவரை 4,999 பேருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இக்கொடுப்பனவுகள் அல்லது விண்ணப்பப் படிவங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் எவரேனும் இருப்பின், அவர்கள் தங்களது பிரதேச செயலகத்தையோ அல்லது மாவட்ட செயலகத்தையோ தொடர்புகொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.