—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு புதிய பணிப்பாளர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிரந்தர பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் குணசிங்கம் சுகுணன் இன்று (04) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

சுகாதார அமைச்சினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த அவருக்கு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பதவி உயர்வுடனான இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடியைச் சொந்த இடமாகக் கொண்ட டாக்டர் குணசிங்கம் சுகுணன், களுவாஞ்சிகுடி, கல்முனை ஆதார வைத்தியசாலை மற்றும் வவுனியா பொது வைத்தியசாலை ஆகியவற்றின் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளராக டாக்டர் ஆர். முரளீஸ்வரன் கடமையாற்றி வந்த நிலையில், தற்போது நிரந்தர பணிப்பாளராக டாக்டர் குணசிங்கம் சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று கடமைகளைப் பொறுப்பேற்க வருகை தந்த புதிய பணிப்பாளருக்கு வைத்தியசாலையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, வைத்தியசாலை வளாகத்திலுள்ள ஆலயத்தில் அவர் வழிபாடுகளை முன்னெடுத்தார்.

வழிபாடுகளைத் தொடர்ந்து, வைத்தியசாலையில் புதிய பணிப்பாளருக்கான வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சத்தியலிங்கம், மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் மார்க்கண்டு திருக்குமார் உள்ளிட்ட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், மருந்தக உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டாக்டர் சிறிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாநகர சபையின் முதல்வரினால் புதிய பணிப்பாளர் கௌரவிக்கப்பட்டதுடன், வைத்தியசாலையின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த புதிய பணிப்பாளர் டாக்டர் சுகுணன், இலங்கை சுகாதார அமைச்சினால் வெளிப்படையான முறையில் நடத்தப்பட்ட போட்டி நேர்முகத் தேர்வில் அதிக புள்ளிகளைப் பெற்று இப்பதவிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

தனது ஏழு ஆண்டு காலப் பணிக்காலத்தில், குறுகிய காலத் திட்டங்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் அளிக்காமல், வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் நீண்டகாலத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்காக மூன்று முதல் ஆறு மாத கால ஆய்வுக்குப் பின்னர் திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஏழை மக்கள், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் அதிகமாகப் பயனடையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில், எந்தவிதமான இன, மத, அரசியல் வேறுபாடுகளுமின்றி அனைவருக்கும் மனிதநேயத்துடன் பாதுகாப்பான சிகிச்சை வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், மருத்துவப் பீடத்திற்கான ஏழு மாடிக் கட்டிடம் மற்றும் அவசர அறுவை சிகிச்சைப் பிரிவிற்கான மேல்மாடிக் கட்டிடப் பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், கார்டியோ ஆஞ்சியோகிராம் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட நவீன மருத்துவக் கருவிகளை விரைவாகக் கொண்டுவந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

நோயாளிகள் தேவையின்றி மணித்தியாலக் கணக்கில் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட கணினிமயமாக்கப்பட்ட தொழில்நுட்ப முறைமையை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் விரிவுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய மருத்துவப் பணியாளர்களின் தொழில்திறனை மேம்படுத்துவதுடன், மருத்துவப் பீடத்துடனான தொடர்புகளையும் பலப்படுத்தவுள்ளதாகக் கூறினார்.

ஒருங்கிணைந்த கூட்டுப் பணியின் ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை இலங்கையிலேயே மிகச்சிறந்த போதனா வைத்தியசாலையாக மாற்றுவதே தனது முதன்மை நோக்கம் என்றும் புதிய பணிப்பாளர் டாக்டர் சுகுணன் உறுதியளித்தார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.