—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

காவியுடை விவகாரத்தில் அமைச்சரின் விளக்கம்

காவியுடை விவகாரத்தில் அமைச்சரின் விளக்கம்

நீதிமன்றத் தீர்ப்புக்கு அமையச் சிறைத் தண்டனை அனுபவிக்கும் பௌத்த பிக்குகளின் காவியுடை விவகாரம் தொடர்பில், சிறைச்சாலைச் சுற்றறிக்கைக்கு அமைவாக உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிறைத் தண்டனை பெறுகின்ற பிக்குகளின் காவியுடை தொடர்பில் சுற்றறிக்கையின் பிரகாரமே தீர்வு வழங்கப்பட்டுள்ளது. ஞானசார தேரரின் விவகாரத்தை ஒருசில ஊடகங்களே பெரிதுபடுத்தி வருகின்றன.

புதிதாகச் சிறைச்சாலைகளை நிர்மாணிப்பதோ அல்லது கைதுகளைக் தீவிரப்படுத்துவதோ அரசின் நோக்கமல்ல. அதேவேளை, சிறைச்சாலைகளில் நெரிசல் காணப்படுகின்றது என்பதற்காகக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யாமல் இருக்கவும் முடியாது.

சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, அறிக்கைகள் நீதிமன்றத்துக்கு உடனடியாகச் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

இதன் பயனாக, கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் மட்டும் சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் இருந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறைச்சாலை நெரிசலுக்குத் தொழில்நுட்ப அடிப்படையில் தீர்வு காண்பதற்குத் துறைசார் தரப்பினரின் ஒத்துழைப்புகளும் பெறப்பட்டு வருகின்றன.

மக்களின் போராட்டங்களை முடக்கும் நோக்கம் அரசுக்கு எப்போதுமே கிடையாது. நாட்டில் ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபடும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆனால், அந்தப் போராட்டங்கள் சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படக் கூடாது” என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.