அடுத்த ஆட்சி யாருக்கு?

தற்போதைய இடதுசாரிக் கொள்கையுடைய அரசுக்கு மாற்றாக, சர்வதேச அங்கீகாரமும் அனுபவமும் கொண்ட வலதுசாரி அரசொன்றை அமைக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
“எங்களை விடவும் சிறந்த ஒரு குழுவே அடுத்ததாக ஆட்சியைக் கைப்பற்றும்” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அடிக்கடி குறிப்பிடுவது, மறைமுகமாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டணிக் குழுவையே குறிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“எதிர்வரும் காலங்களில் மாகாண சபைத் தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டும் நிச்சயமாக ஒரே சின்னத்தின் கீழ் இணைந்து போட்டியிடவுள்ளன. தற்போதைய இடதுசாரி அரசை வீழ்த்துவதையும், நாட்டின் எதிர்காலத்தை மாற்றியமைப்பதையும் இந்தக் கூட்டணி முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் 1.23 மில்லியன் பேர் புதிய வாக்காளர்களாக உருவெடுக்கும் ‘ஜென்-ஸீ’ தலைமுறையினரும், முன்னர் இந்த இரு கட்சிகளும் தனித்துச் செயற்பட்டதால் வாக்களிக்காதிருந்த சுமார் 1.5 மில்லியன் வாக்காளர்களும் இந்தக் கூட்டணியின் பக்கம் அணிதிரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் முதன்மைக் காரணம் டொலர் பற்றாக்குறையாகும்.
வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துள்ளமை மற்றும் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளமைக்குத் தீர்வாக, கூட்டணி அரசு அமைக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே 10 பில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் டொலர் கையிருப்பை வலுப்படுத்த முடியும். உழைக்கும் போது செலுத்தும் வரி 11 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் வரை குறைக்கப்படும். எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களும் கணிசமாகக் குறைக்கப்படும்.
தற்போதைய அரசின் ஆட்சிக் காலத்திலும் பெருமளவிலான இரகசிய அரசியல் ஒப்பந்தங்கள் இடம்பெற்று வருகின்றன. ஊழல் ஒழிப்பு என்ற போர்வையில் எதிர்க்கட்சியினர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அரசியல் அடக்குமுறைகளையும் பழிவாங்கல்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

Comments 0
Be the first to comment.