—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

சுகாதாரச் சீர்கேட்டில் கல்முனை பேருந்து நிலையம்!

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பிரதான பேருந்து நிலையம், தற்போது பயணிகள் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பாரிய சுகாதாரச் சீர்கேடுகளுடனும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுடனும் காணப்படுவதாகப் பொதுமக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இப்பேருந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகளும், நீண்ட தூரச் சேவைகளில் ஈடுபடும் தனியார் பேருந்துகளும், அருகில் உள்ள முச்சக்கர வண்டிகளும் தரித்து நின்று, தினசரி பல்லாயிரக்கணக்கான மக்களுக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கி வருகின்றன. எனினும், முறையான பராமரிப்பின்மை காரணமாக மழை மற்றும் வெயில் காலங்களில் பயணிகள் ஓய்வெடுக்க முடியாமலும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டும் வருகின்றனர்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பேருந்து நிலையம் தற்போது எருமை மாடுகளும் பசுக்களும் தங்கியிருக்கும் இடமாக மாறியுள்ளதுடன், அதிகளவிலான தெருநாய்களின் நடமாட்டமும் காணப்படுகின்றது. இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதிகள் இல்லாததால் பேருந்து நிலையம் இருளில் மூழ்கிக் காணப்படுவதுடன், பல்வேறு சமூக விரோதச் செயல்களும் இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் புறாக்கள் மற்றும் காகங்களின் எச்சங்கள், நாய்களின் மலங்கள் நிறைந்து காணப்படுவதால், அவற்றில் அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.

இங்கு பொது இடங்களில் வெற்றிலை மென்று துப்புதல், புகைத்தல் போன்ற சுகாதாரத்துக்கு முரணான செயற்பாடுகளும் எவ்வித அச்சமுமின்றி வெளிப்படையாக இடம்பெற்று வருகின்றன.

கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிமனை, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம், கல்முனை மாநகர சபை உள்ளிட்ட முக்கியமான அரச நிறுவனங்கள் சூழ அமைந்திருந்தும், இப்பிரதான பேருந்து நிலையம் இத்தகைய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு புறக்கோட்டை இ.போ.ச. பிரதான பேருந்து நிலையத்திலும் கடந்த காலங்களில் இவ்வாறான அசௌகரியங்கள் காணப்பட்ட போதிலும், தற்போது அது நவீனமயப்படுத்தப்பட்டு, இலங்கை விமானப்படையின் மேற்பார்வையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், CCTV கமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு, தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

புறக்கோட்டையில் சாத்தியமான இத்தகைய நேர்மறையான மாற்றம், அம்பாறை மாவட்டத்தின் முக்கிய நகரான கல்முனையில் ஏன் சாத்தியப்படவில்லை எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

சட்டங்களும் விழிப்புணர்வுகளும் ஏட்டில் மட்டுமே உள்ளதாகக் கவலை தெரிவிக்கும் பொதுமக்கள், பேருந்து நிலைய வளாகத்தைத் தினமும் சீரான முறையில் துப்புரவு செய்தல், கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் உட்பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்துதல், போதிய மின்விளக்கு வசதிகளை ஏற்படுத்துதல், பாதுகாப்புக்காக CCTV கமராக்களைப் பொருத்துதல் மற்றும் பொது இடங்களில் அசுத்தம் செய்வோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அவசரமாக முன்வைக்கின்றனர்.

எனவே, கல்முனை மாநகர சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, பொலிஸார் மற்றும் சுகாதார அதிகாரிகள் உடனடியாக ஒன்றிணைந்து, பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இப்பிரதான பேருந்து நிலையத்தைப் பாதுகாப்பானதாகவும் தூய்மையானதாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.