செம்மணிக்கு சர்வதேச நீதி கோரி ஒன்றுகூடும் உறவுகள்!

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச விசாரணை கோரி, எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி செம்மணி பகுதியில் பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அறிவித்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையைத் தாம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.
செம்மணி மனிதப் புதைகுழியில் 110 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது 583 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எனினும், உரிய டி.என்.ஏ பரிசோதனைகளோ தடயவியல் விசாரணைகளோ முன்னெடுக்கப்படாமல், அதனை மனிதப் புதைகுழி எனத் தெளிவாகக் குறிப்பிடாமல் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாக உறவுகள் குற்றஞ்சாட்டினர். இவ்வாறான அறிக்கையைத் தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கொக்குத்தொடுவாய் மற்றும் மற்றுமொரு மனிதப் புதைகுழி விவகாரங்களைப் போன்று செம்மணி விவகாரமும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தமக்கு இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
எனவே, சர்வதேச நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுணர்களின் நேரடி பங்களிப்புடன் டி.என்.ஏ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், சர்வதேச நீதி மற்றும் சர்வதேச விசாரணையைக் கோரி எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு செம்மணி பகுதியில் போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்தனர்.
தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேச நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேட்டுக்கொண்டனர்.

Comments 0
Be the first to comment.