—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

செம்மணி அறிக்கை குறித்து கஜேந்திரகுமார் கேள்வி

செம்மணி அறிக்கை குறித்து கஜேந்திரகுமார் கேள்வி

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள நான்காவது இடைக்கால அறிக்கை முற்றிலும் திசைதிருப்பும் வகையில் அமைந்துள்ளதாகவும், உண்மைகளை மூடி மறைக்கும் சதிச் செயல் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

செம்மணி விவகாரம் தொடர்பாக முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட ஆய்வுகளை, நான்காவது இடைக்கால அறிக்கை தலைகீழாக மாற்றி எழுதியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதுவரை கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் பெரும்பாலானவை உடைகள் இன்றிப் புதைக்கப்பட்டிருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இயற்கை அழுத்தம் காரணமாக உடைகளும் உடல்களும் கரைந்துபோயிருக்கலாம் எனப் புதிய விளக்கம் அளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரும் சர்வதேச நிபுணர்களும் செம்மணி விசாரணைக்குப் போதிய நிதி, தடயவியல் மற்றும் உடற்கூற்றியல் தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்றும், சர்வதேச உதவிகள் அவசியம் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

செம்மணி விசாரணைகளைச் சர்வதேசப் பொறுப்புடன் முழுமையாக நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவதாகவும், குற்றங்களைச் செய்துவிட்டு அவற்றை மூடிமறைக்க முற்பட்ட முந்தைய அரசாங்கங்களிலிருந்து தற்போதைய அரசாங்கம் வேறுபட்டதல்ல என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மேலும், செம்மணி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களும் நீதிகோரும் தரப்பினரும் தற்போதைய அரசாங்கத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.