கால்நடை வைரஸால் மனிதர் உயிரிழப்பு

இதுவரை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மட்டுமே தாக்கி வந்ததாகக் கூறப்படும் ஷமோண்டா வைரஸால் (Shamonda virus) பாதிக்கப்பட்ட முதல் மனிதர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லியான் நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர உடல்நலக் குறைபாடு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரைப் பரிசோதித்தபோது, அவர் ஷமோண்டா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
குறித்த நபருக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்த நிலையிலேயே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒர்த்தோபுன்யா (Orthobunya) வகையைச் சேர்ந்த ஷமோண்டா வைரஸ், மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் 1960களில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டது.
கொசுக்கள் போன்ற மிகச் சிறிய பூச்சியினங்கள் கடிப்பதன் மூலம் இந்த வைரஸ் மாடுகள், ஆடுகள், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளுக்குப் பரவக்கூடும். இந்த வைரஸால் பாதிக்கப்படும் கால்நடைகளுக்குக் காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படுவதுடன், அவற்றின் பால் சுரக்கும் தன்மையும் குறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை ஒரு மனிதர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த மரணம் தொடர்பாக பிரான்ஸ் சுகாதார அமைச்சு தெரிவிக்கையில், உயிரிழந்த நோயாளிக்கு பூச்சி கடித்ததன் மூலம் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், கடுமையான உடல்நலப் பாதிப்புகளைக் கொண்ட ஒருவருக்கு ஏற்பட்ட விதிவிலக்கான சம்பவமாகவே இதைக் கருத முடியும் என்றும், பொதுமக்களுக்கு நேரடி ஆபத்தோ பெருந்தொற்று அச்சுறுத்தலோ இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
எனவே, இந்த வைரஸ் தொடர்பாகப் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் பிரான்ஸ் சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Comments 0
Be the first to comment.