செம்மணி வாக்குமூலத்தில் தீர்வு தேடும் மனோ

வடக்கில் காணாமல்போனோர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்காக, செம்மணி விவகாரம் தொடர்பில் மரணதண்டனைக் கைதியும் முன்னாள் லான்ஸ் கோப்ரலுமான சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளைத் தேட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
"பயிரிடப்படாத தரிசு நிலங்களை மலையக மக்களுக்கு வழங்குவதாகத் தேசிய மக்கள் சக்தி தனது 'ஹட்டன் பிரகடனம்' மூலம் உத்தரவாதம் அளித்துவிட்டு, இன்று அக்காணிகளைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளமை மோசமான துரோகமாகும்.
இதனை உடனடியாக நிறுத்தி, தரிசு நிலங்களை மலையக இளைஞர்களுக்குப் பிரித்து வழங்கும் 'மலையக வாழ்வாதாரக் காணிக் கொள்கையை' அரசாங்கம் அறிவிக்க வேண்டும்.
மலையக மக்களின் 200 வருட காலப் பங்களிப்பைக் கருத்திற்கொண்டு, வதிவிடக் காணியாகக் குறைந்தபட்சம் 15 பேர்ச் காணி வழங்கும் வகையில் 'மலையக வதிவிடக் காணிக் கொள்கை' உருவாக்கப்பட வேண்டும்.
தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரத்தில், கம்பனிகள் தன்னிச்சையாகக் கொழுந்து மற்றும் இறப்பர் எடையை உயர்த்தியிருப்பதைத் தடுத்து, ஒரே வேலைக்கு ஒரே சமமான சம்பளத்தைச் சட்டப்பூர்வமாக்க வேண்டும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக அகற்றுவோம் என எங்களுடன் இணைந்து போராடிய ஜனாதிபதி, இன்று அதற்குப் பதிலாக மாற்றுச் சட்டத்தைக் கொண்டுவர முயல்வது தவறானது. புதிய சட்ட வரைவையும் பழைய சட்டத்தையும் அரசாங்கம் முழுமையாக அகற்ற வேண்டும்.
வடக்கு, கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளை விடுவித்தல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், புதிய அரசமைப்பை உருவாக்குதல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை நடத்துதல் தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்" என்றார்.
அத்துடன், மலையக மக்களின் காணி உரிமை, வதிவிட உரிமை, சம்பளப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட 15 பிரதான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், வரவு–செலவுத் திட்ட உரையில் இக்கோரிக்கைகளுக்கான தெளிவான தீர்வுகளை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

Comments 0
Be the first to comment.