—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தமிழகத்துக்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞர் கைது

தமிழகத்துக்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞர் கைது

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே குந்துகால் கடல் பகுதியில், கடல் வழியாகச் சட்டவிரோதமாகத் தமிழகத்துக்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞர் ஒருவரை கியூ பிரிவு பொலிஸாரும் மண்டபம் மரைன் பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர்.

அவரை நாட்டுப் படகில் அழைத்து வந்து கரையில் இறக்கிவிட உதவியதாகக் கூறப்படும் மூவரையும் பொலிஸார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் அருகே உள்ள குந்துகால் ஆர்ச் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் கியூ பிரிவு பொலிஸாரும் மண்டபம் மரைன் பொலிஸாரும் இணைந்து கடலோரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, நாட்டுப் படகில் மூவர் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்துள்ளனர்.

அந்தப் படகில் வந்த குந்துகால் குழந்தை இயேசு நகரைச் சேர்ந்த ராபர்ட் (40), பாம்பனைச் சேர்ந்த தினேஷ் (33) ஆகியோர் பொலிஸாரைக் கண்டதும் தப்பியோடியுள்ளனர்.

இதையடுத்து, பொலிஸார் குந்துகால் ஆர்ச் பகுதியில் அவர்களை விரட்டிப் பிடிக்க முயன்றபோது, இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவ முயன்ற வவுனியாவைச் சேர்ந்த இளைஞர் கனிஸ்டன் மட்டும் பிடிபட்டார்.

கைது செய்யப்பட்ட கனிஸ்டனிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், அவரது அண்ணன் துஷ்யந்தன் (32) கடந்த 2014ஆம் ஆண்டு கடவுச்சீட்டு மூலம் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளதாகவும், தற்போது தமிழகத்தின் ஒட்டன்சத்திரம் தாலுகா, விருப்பாச்சி பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது தாய் மகாலட்சுமி (53) பிரான்ஸ் நாட்டில் வசித்து வருவதாகவும், தனது தங்கை கணவர் மற்றும் குழந்தைகளுடன் இலங்கையில் வசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் தனக்கு எதிராக வழக்கொன்று நிலுவையில் இருப்பதால், முறையாக விமானம் மூலம் இந்தியாவுக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், இதனால் கடல் வழியாக இந்தியாவுக்கு வருவதற்கு இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்த தனக்குத் தெரிந்த தானிஷ் அகமதுவிடம் உதவி கோரியதாகவும் கனிஸ்டன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, தானிஷ் அகமது ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த கெவின் ராஜ் (33) என்பவரைத் தொடர்புகொண்டு, இலங்கையிலிருந்து ஒருவரை அனுப்பி வைப்பதாகவும், அவரை நாட்டுப் படகில் ஏற்றிவந்து பாம்பன் குந்துகால் கடற்கரையில் இறக்கிவிடுமாறும் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதற்காக கனிஸ்டனின் அண்ணன் துஷ்யந்தன் படகுக் கூலியாக 40,000 ரூபாய் வழங்கியதாகவும், கெவின் ராஜுக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த போலக் (26) என்பவரும் வந்ததாகவும் கனிஸ்டன் தெரிவித்துள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, தப்பியோடியவர்களைப் பிடிக்க கியூ பிரிவு பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதன்போது, ஒட்டன்சத்திரத்தில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த துஷ்யந்தன், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கெவின் ராஜ் மற்றும் போலக் ஆகிய மூவரையும் பொலிஸார் பிடித்துள்ளனர்.

அவர்களை மண்டபம் மரைன் பொலிஸ் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இலங்கையிலிருந்து கனிஸ்டனைத் தமிழகத்துக்கு அழைத்து வருவதற்கு உதவியதாகக் கூறப்படும் நபர்களின் கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள், தொடர்புகள் மற்றும் கடல் வழிப் பயணத்தில் தொடர்புடைய ஏனைய நபர்கள் குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடல் வழியாகச் சட்டவிரோதமாகத் தமிழகத்துக்குள் நுழைய முயன்ற சம்பவத்தில், இலங்கை இளைஞர் ஒருவரும் அவருக்கு உதவியதாகக் கூறப்படும் மூவரும் பிடிபட்டுள்ளமை ராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.