—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தேயிலைப் பயிர்களுக்கு ரூ. 10 இலட்சம் காப்பீடு

தேயிலைப் பயிர்களுக்கு ரூ. 10 இலட்சம் காப்பீடு

தேயிலைத் தொழிலைப் பாதுகாக்கும் நோக்கில், விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டுச் சபை தேயிலைக் கன்று பராமரிப்பு மற்றும் தேயிலைப் பயிர்ச் செய்கைகளுக்கான புதிய காப்பீட்டுத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் ஏனைய எதிர்பாராத இடர்நிலைகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிராக ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 இலட்சம் ரூபாய் வரை காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் இச்சபை, தேயிலைப் பயிர்ச் செய்கையாளர்களை நிதி இழப்புகளிலிருந்து பாதுகாப்பதுடன், தேயிலைத் தொழிலின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கிலும் இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

வெள்ளப்பெருக்கு, வறட்சி, மண்சரிவு உள்ளிட்ட கட்டுப்படுத்த முடியாத இயற்கை அனர்த்தங்கள், அத்துடன் கட்டுப்படுத்த முடியாத நோய்கள் மற்றும் பூச்சித் தாக்குதல்களால் ஏற்படும் சேதங்களையும் இக்காப்பீட்டுத் திட்டம் உள்ளடக்குகிறது.

தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றும் நிலையில், தேயிலைச் சிறுதோட்ட அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட அல்லது வணிக நிறுவனங்களாகப் பதிவு செய்யப்பட்ட தேயிலைக் கன்று பராமரிப்பு நிலையங்கள் மற்றும் தேயிலைப் பயிர்ச் செய்கைகளுக்கு இத்திட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேயிலைக் கன்று பராமரிப்புக்காக ஒரு கன்றுக்கு ஆண்டுதோறும் 35 சதவீதக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளது.

புதிய தேயிலைக் கன்றுகளை நடுவதிலிருந்து அறுவடை ஆரம்பமாகும் வரை, நான்கு ஆண்டுகள் வரையிலான காலப்பகுதிக்கு ஏக்கர் ஒன்றுக்கு அதிகபட்சமாக 10 இலட்சம் ரூபா காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தேயிலைக் கன்று பராமரிப்பு மற்றும் தேயிலைப் பயிர்ச் செய்கை ஆகிய இரண்டுக்குமான வருடாந்தக் காப்பீட்டுக் கட்டணம், காப்பீட்டுத் தொகையில் 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய்க்குக் கணிசமான பங்களிப்பை வழங்கும் தேயிலைத் தொழிலைப் பாதுகாப்பதையும், தேயிலைப் பயிர்ச் செய்கையாளர்களை ஊக்குவிப்பதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை விவசாய மற்றும் விவசாயிகள் காப்பீட்டுச் சபையின் மாவட்ட அலுவலகங்கள் ஊடாகவோ அல்லது 1918 என்ற அவசர அழைப்பு இலக்கத்தைத் தொடர்புகொள்வதன் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.