—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தொண்டமானின் 27ஆவது நினைவு தினம்!

மலையக மக்களின் ஒப்பற்ற பெருந்தலைவரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிறுவனத் தலைவருமான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதி வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய பிரதிநிதிகள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நினைவஞ்சலி நிகழ்வில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும் தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

அத்துடன், இ.தொ.காவின் பிரதித் தலைவர்களான கணபதி கனராஜ், அனுசியா சிவராஜா, பிரதிப் பொதுச்செயலாளர் செல்லமுத்து, உப தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் - டிக்கோயா நகர சபை உறுப்பினர் அழகமுத்து நந்தகுமார் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, கொழும்பிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமியபவனிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆரம்பத்தில் இலங்கை - இந்திய காங்கிரஸின் உருவாக்கத்துக்கு முதன்மைப் பங்களிப்பை வழங்கி, அதன் தலைவராகவும் செயலாற்றினார்.

பின்னர், அது 'இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்' எனப் பெயர் மாற்றம் பெற்றது முதல், தனது வாழ்நாளின் இறுதிவரை அதன் தலைவராக இருந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.

நாட்டின் பல முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகளை வகித்து, இலங்கை அரசியலில் தேசியத் தலைவராகவும் முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.