மயக்க மருந்து கொடுத்து கொள்ளை: வயோதிபப் பெண் உ**யிரிழப்பு!

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டு வந்ததாகக் கூறப்படும் கணவன், மனைவியான சந்தேகநபர்கள் இருவர் கொடுத்த மயக்க மருந்தினால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 65 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் உ**யிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (29) இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், உயிரிழந்தவரின் உறவினர்கள் குறித்த மரணம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
கடந்த மார்ச் 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் உயிருடன் போராடிக்கொண்டிருந்த இளம் தாய் ஒருவர் மீட்கப்பட்டதுடன், அதே கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் பெண் ஒருவரின் ச**டலமும் கண்டெடுக்கப்பட்டது.
அத்துடன், அருகிலுள்ள வயல் பகுதியில் காப்பாற்றப்பட்ட இளம் தாயின் 3 வயதும் 4 மாதங்களுமான பெண் குழந்தையும் உயிருடன் மீட்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வவுணதீவு, பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி பிற்பகல் 1 மணியளவில் மட்டக்களப்பு பிரதான பேருந்து நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அங்கு, வவுணதீவு, பாவக்கொடிச்சேனையில் வசிக்கும் தனது மகளைச் சந்திப்பதற்காகப் பேருந்துக்காகத் தனியாகக் காத்திருந்த வயோதிபப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர்.
இதன்போது, சந்தேகநபர்களான கணவன், மனைவி இருவரும் அந்த வயோதிபப் பெண்ணிடம், “கவனம் அம்மா, இங்கே கள்ளர்கள் நடமாட்டம் அதிகம். கழுத்தில் இருக்கும் தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு போய்விடுவார்கள்” என அறிவுரை கூறியுள்ளனர்.
இதையடுத்து, அந்த வயோதிபப் பெண் தனது கையில் இருந்த 2 பவுண் வளையலையும், கழுத்தில் அணிந்திருந்த 5 பவுண் தங்கச் சங்கிலியையும் கழற்றித் தனது கைப்பையில் வைத்துள்ளார்.
அப்போது, சந்தேகநபர்கள் மயக்க மருந்து கலக்கப்பட்ட பழச்சாற்றை அந்தப் பெண்ணுக்குப் பருகக் கொடுத்துள்ளனர்.
அதனைப் பருகிய சிறிது நேரத்தில் அவர் மயக்கமுற்றதைத் தொடர்ந்து, அவரது தங்க ஆபரணங்களைக் கொள்ளையிட்டுவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர், சுமார் நான்கு மணித்தியாலங்களின் பின்னர், குறித்த பெண் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
நீரிழிவு நோயாளியான அந்த வயோதிபப் பெண், அதன் பின்னர் மன மற்றும் உடல் ரீதியாக நோய்வாய்ப்பட்டதுடன், சிறுநீரகமும் பாதிக்கப்பட்டதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (29) உ**யிரிழந்தார்.
சந்தேகநபர்கள் வழங்கிய மயக்க மருந்து காரணமாகவே அந்தப் பெண் நோய்வாய்ப்பட்டு உ**யிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டி, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.