—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நாடாளுமன்றில் கூச்சல்; சபை ஒத்திவைப்பு

நாடாளுமன்றில் கூச்சல்; சபை ஒத்திவைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டமையால், சபை நடவடிக்கைகள் நண்பகல் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில் காலை 9.30 மணிக்குச் சபை கூடியதும், உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரம் ஆரம்பமாகவிருந்த நிலையில், எதிர்க்கட்சியினர் திடீரென சபையின் நடுவே திரண்டு அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "சபாநாயகருக்கு ஒரு வீடா, இரண்டு வீடா?", "தலையணை எங்கே?" எனக் கூச்சலிட்டனர். இதனால் சபையின் வழமையான நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராகக் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எழுந்த சில சந்தேகங்கள் குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று காலை சபாநாயகரின் அலுவலகத்தில் அவருடன் கலந்துரையாடியிருந்தார். அதற்குச் சபையில் பதிலளிப்பதாகச் சஜித்திடம் சபாநாயகர் உறுதியளித்திருந்தார்.

எனினும், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானபோது சபாநாயகர் சபைக்குத் தலைமை தாங்காமல் பிரதிச் சபாநாயகரே தலைமை தாங்கினார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சியினர், காலையில் உறுதியளித்த சபாநாயகர் பின்னர் ஏன் சபைக்கு வந்து பதிலளிக்கத் தயங்கினார் எனக் கேள்வி எழுப்பினர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கண்டனக் கோஷங்களும் எழுப்பப்பட்டன.

வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்துக்கு முன்னரே சஜித் கேள்வி எழுப்பியதால், அவரைத் தொடர்ந்து பேசுவதற்குப் பிரதிச் சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனால் எதிர்க்கட்சித் தலைவரின் சிறப்புரிமை மீறப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபாநாயகரின் செயலுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.

சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில், நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாத சூழலில் பிரதிச் சபாநாயகர் சபையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.

பின்னர், சபை நடவடிக்கைகள் மீண்டும் பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகி, அமைதியான முறையில் தொடர்ந்து நடைபெற்றன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.