பருத்தித்துறை பஸ் நிலையத்துக்கு 29 மில்லியன்!
பருத்தித்துறை மத்திய பஸ் நிலையத்தை நவீன வசதிகளுடன் அபிவிருத்தி செய்யும் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக 29 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேலைத்திட்டங்களைப் பருத்தித்துறை நகர சபை முன்னெடுப்பதற்கு சபை அமர்வில் ஏகமனதாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை நகர சபையின் 17ஆவது மாதாந்த அமர்வு நேற்று காலை 9.00 மணிக்கு நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் தலைமையில், அகவணக்கத்துடன் நகர சபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
இந்த அமர்வில் பருத்தித்துறை நகர சபையின் செயலாளர் சந்திரசேகரம் பிரசாத், உப நகரபிதா தே. தேவராஜேந்திரன் உள்ளிட்ட சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட 15 உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
பஸ் நிலைய அபிவிருத்தித் திட்ட வரைவு கடந்த சபை அமர்வில் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனைச் செயற்படுத்துவதற்காக நகர சபைக்குரிய நிதியிலிருந்து 29 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நகரபிதா அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிப்பதற்குச் சபையின் அனுமதியைக் கோரி நகரபிதா வின்சன் டி போல் டக்ளஸ் போல் முன்வைத்த பிரேரணைக்குச் சபை ஏகமனதாக அனுமதி வழங்கியது.
இந்தக் கூட்டத் தொடரின்போது, ஹாட்லிக் கல்லூரி விடுதி மற்றும் விளையாட்டு மைதானம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், கல்லூரி வீதியின் ஓரத்தில் பாடசாலை வளாகம் வரை பாதுகாப்பு அமைப்புகளுடன் கூடிய நடைபாதை அமைப்பது தொடர்பில் நகர சபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலத்தால் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
சபையில் விரிவாக ஆராயப்பட்ட இந்தப் பிரேரணையை உடனடியாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நகர சபையின் ஏனைய முக்கிய தீர்மானங்கள்
சந்தைக் கடைகள் குத்தகை: நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்பட்ட கடைகளின் ஒப்பந்த உரிமையாளர்கள் மரணித்தமை அல்லது வாரிசுகள் இல்லாத நிலைமை குறித்து ஆராயப்பட்டது. அந்த ஒப்பந்தங்களை இரத்துச் செய்து, தற்போது நீண்டகாலமாக அக்கடைகளைப் பயன்படுத்தி வருபவர்களுக்குப் புதிய வாடகை ஒப்பந்தங்களை வழங்குவதற்கு ஆளுநரின் அனுமதியைப் பெற முடிவு செய்யப்பட்டது.
தீயணைப்புப் பிரிவு: நகரப் பகுதியில் தீயணைப்புப் பிரிவு அலகு ஒன்றை நிறுவுவதற்காகத் தனியார் காணிகளைக் கொள்வனவு செய்வதற்கான முதற்கட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
பொது நூலகம் – மின் இணைப்பு: பொது நூலக வாசகர் வட்டத்தில் புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வதற்கான வரையறைகளை மீளாய்வு செய்தல், பாதுகாப்பு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தைப் புதுப்பித்தல் மற்றும் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் மின் இணைப்புகளை இலங்கை மின்சார சபையுடன் இணைந்து சீரமைத்தல் ஆகிய விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Comments 0
Be the first to comment.