மஹிந்தவைப் போற்ற வேண்டும்: சாந்த பண்டார

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வயோதிப நிலையையடைந்துள்ளார் என்பது உண்மைதான். ஆனால், அவர் இந்த நாட்டிற்காகச் செய்த சேவைகள் என்றும் வயோதிபமடையாது" என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்தார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் பங்களிப்புகள் குறித்து அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தாய்நாட்டுக்காகப் பெரும் சேவையாற்றியுள்ளார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த உண்மையை எமது நாட்டின் மக்கள் விரைவில் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.
வியட்நாம் நாட்டுக்குச் சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த புரட்சித் தலைவரை அந்த நாட்டு மக்கள் இன்றளவிலும் மிகவும் உயர்வாக மதித்துப் போற்றுகின்றனர். அவரது உடலம் இன்றும் பாதுகாக்கப்பட்டு, உரிய மரியாதைகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
ஆனால், இலங்கையில் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த சில இளைஞர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் தியாகங்களைப் புரிந்துகொள்ளாமல், அவரை 'கிழட்டு மைனா' என விமர்சித்துப் பேசி வந்தனர்.
கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவை அவ்வாறு தவறாக விமர்சித்தவர்கள், தங்களது நிலைப்பாட்டில் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டோம் என்பதை இன்று படிப்படியாக உணரத் தொடங்கியுள்ளனர்.
நாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கண்ட பின்னர், தாங்கள் செய்த தவறை உணர்ந்து எம்மிடம் நேரடியாகவே வந்து பேசி வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்" என்றார்.

Comments 0
Be the first to comment.