மகனின் உயிருக்கு ஆபத்து; அதிகாரிகளிடம் தாயார் முறைப்பாடு

ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் சிறைக்குள்ளேயே உ**யிரிழந்த இஷார ஹர்ஷ குமாரவுடன் கைது செய்யப்பட்டு, கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாகி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வருண மதுஷங்கவை உடனடியாக சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தி, அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி, அவரது உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் தனது மகனைக் கைது செய்த சந்தர்ப்பத்திலேயே கடுமையாகத் தாக்கியதாகவும், அதன் பின்னர் ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பின்னரும் தொடர்ந்து தாக்கியதாகவும் அவரது தாயாரான சுஜாதா ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பொலிஸாரின் இந்தச் சித்திரவதைகள் காரணமாக சிறைச்சாலையிலும் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கும் தனது மகன், வெள்ளிக்கிழமை (30) வரையிலும் முறையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என, அன்றைய தினம் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று திரும்பிய பின்னர் அவர் தெரிவித்துள்ளார்.
“விடியும் வரை அடித்தார்கள்”
“எனது மகனை இதுவரை வைத்தியரிடம் காட்டவில்லை. மகன் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார். அவரால் சரியாகக் கதைக்கக்கூட முடியவில்லை. எதுவும் சொல்கிறார் இல்லை. ஆனால், அவருக்கு உள்ள பயம் முகத்தில் தெரிகிறது” என சுஜாதா ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சிறைச்சாலைக்கு வந்து தனது மகனிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக மகன் தன்னிடம் தெரிவித்ததாகக் கூறிய அவர், இஷார ஹர்ஷ குமாரவின் கொ**லைச் சம்பவத்தில் மிக முக்கியமான நேரில் கண்ட சாட்சியான வருண மதுஷங்கவுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகளை விரைவாக வழங்கி, அவரது உயிரைப் பாதுகாக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுப்பதாகவும் வலியுறுத்தினார்.
கொ**லை செய்யப்பட்ட இஷார ஹர்ஷ குமார மற்றும் தற்போது விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வருண மதுஷங்க ஆகியோரின் நண்பரான ரங்க மதுஷங்க, கடந்த 26ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்து, வருண மதுஷங்கவை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், பொலிஸ் அதிகாரிகள் தனது மகனைக் கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்து சுமார் ஒரு வாரம் கடந்துள்ள போதிலும், இதுவரை மருத்துவப் பரிசோதனைக்காக அவரை வைத்தியர் ஒருவரிடம் முன்னிலைப்படுத்தவில்லை என வருண மதுஷங்கவின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“கடந்த 25ஆம் திகதி இரவு மகனைப் பிடித்துக்கொண்டு செல்லும்போதே கடுமையாகத் தாக்கினார்கள். அவரது முகம் முழுவதும் காயங்கள் காணப்பட்டன. இரவு முழுவதும் விடியும் வரை தாக்கியதாக மறுநாள் பொலிஸ் நிலையத்தில் வைத்தும் என்னிடம் தெரிவித்தார்.
வீட்டிலிருந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது, ஜீப் வண்டியிலும் துப்பாக்கியின் பின்பகுதியால் முகத்தில் தாக்கியதாகவே மகன் என்னிடம் கூறினார்” என சுஜாதா ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதைகளைப் பொருட்படுத்தாமல், அதிகாரிகள் தனது மகனைச் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தாமல் இருப்பார்களாயின், இதற்கான நீதியைத் தாம் யாரிடம் கோருவது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போலி பிணை உத்தரவாதம்
ஹோமாகம பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவுப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரால் தாக்கப்பட்டு கொ**லை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் இஷார ஹர்ஷ குமாரவுடன் கைது செய்யப்பட்ட வருண மதுஷங்கவைச் சந்தித்துப் பேசுவதற்கு, கடந்த 26ஆம் திகதி அதிகாலை அவரது தாயாருக்கும் உறவினர்களுக்கும் சிறிது நேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதன்போது, வருணவைப் பொலிஸ் பிணையில் விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அவருக்கு சட்டத்தரணியின் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் பொலிஸ் அதிகாரிகள் அவரது தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.
“நான் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று மகனுடன் பேசினாலும், அவரால் என்னுடன் ஒரு வார்த்தைக்கூட சரியாகப் பேச முடியவில்லை. சத்தம் வரவில்லை. நாம் இரவில் தூங்கும்போது குறட்டை விடுவது போன்ற சத்தமே அவரது பேச்சில் இருந்தது. அதற்கான காரணம் என்னவென்று நான் கேட்டபோது, ‘என்னை மிகவும் கடுமையாகத் தாக்கினார்கள், என்னைச் சிறையில் அடைத்துவிடுவார்கள் என்று பயமாக இருக்கிறது. அதனால் நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். பொலிஸ் அதிகாரிகள் கோபப்படுவார்கள்’ எனக் கூறினார். தேசிய அடையாள அட்டையின் பிரதிகளை எடுத்துக்கொண்டு வந்து கையொப்பமிட்டு மகனை அழைத்துச் செல்லுமாறே பொலிஸ் அதிகாரிகளும் என்னிடம் தெரிவித்தனர்” எனத் தாயார் ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
எனினும், அந்த இடைப்பட்ட காலத்தில் பொலிஸார் தனது மகனை இரகசியமாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, பொய்யான குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைத்துள்ளதாக அந்தத் தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“மகனின் முகம் முதல் உடல் முழுவதும் துணியால் மூடியே நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றிருந்தனர். அவரை நீதிமன்றத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தபோதுதான், நீதிபதி பொலிஸாரிடம், ‘அந்த நபரை ஏன் மழையில் நிறுத்தி வைத்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு பொலிஸார், ‘திருட்டுச் சம்பவம் ஒன்றுக்காக அவரை அழைத்து வந்தோம். அடையாள அணிவகுப்புக்கு ஆட்கள் வரவில்லை’ எனத் தெரிவித்தனர். அதன் பின்னர் நீதிபதி மகனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
“பொலிஸ் நிலையத்தில் என்னிடம் மகனை விடுதலை செய்யப்போவதாகவும், அதனால் சட்டத்தரணி ஒருவரின் உதவி தேவையில்லை என்றும் கூறினார்கள். ஆனால், நீதிமன்றத்தில் நடந்தது முற்றிலும் வேறொன்றாக இருந்தது.
அதுமட்டுமன்றி, திருட்டுச் சம்பவம் தொடர்பாக எங்களிடம் எதுவுமே தெரிவிக்கப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தாக்கப்பட்டு கொ**லை செய்யப்பட்ட இஷார ஹர்ஷ குமாரவைப் பொலிஸார் சித்திரவதை செய்ததைத் தனது மகன் நேரில் கண்டுள்ளார் என்றும், அதனை மறைப்பதற்காகவே பொலிஸார் திட்டமிட்டு நீதிமன்றத்தைக்கூடத் தவறாக வழிநடத்தி, தனது மகனை விளக்கமறியலில் வைக்கச் செய்திருக்கலாம் என்றும் வருண மதுஷங்கவின் தாயார் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த கொ**லைச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாரே தெரிவித்திருந்தாலும், அந்தச் சம்பவத்தின் மிக முக்கியமான சாட்சியான வருண மதுஷங்கவை விளக்கமறியலில் தடுத்து வைக்கப் பொலிஸாரே திட்டமிட்டு நடவடிக்கை எடுத்துள்ளமையானது, விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்பதைக் காட்டுவதாக அரசியல் செயற்பாட்டாளரும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளருமான லஹிரு வீரசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.

Comments 0
Be the first to comment.