—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மத்திய கிழக்கு பயணிகளுக்காக புதிய மருத்துவ மையம்

உலகளாவிய தரத்திலான மருத்துவ சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, சாய்ந்தமருது ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் (JMH DIAGNOSTIC & SPECIALISTS INFIRMARY) மத்திய கிழக்கு நாடுகளுக்கான நவீன மருத்துவப் பரிசோதனை நிலையமும், 'GLOBAL SKILLS HUB' திறன் அபிவிருத்தி மையமும் நேற்று மிகச் சிறப்பாகத் திறந்து வைக்கப்பட்டன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்வோர் மற்றும் பிராந்திய பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, உலகளாவிய தரத்திலான உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கும் நோக்கில் இப்புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் முகாமையாளர் யூ.எல்.எம். றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை குழுமத்தின் தவிசாளரும் பிரபல வைத்திய நிபுணருமான டொக்டர் றிஸான் ஜெமீல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிலையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் உரையாற்றிய பிரதம அதிதி, இப்புதிய மையத்தின் வருகையானது பிராந்தியத்தின் மற்றும் நாட்டின் சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்குப் பெரும் பங்களிப்பாக அமையும் எனத் தெரிவித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பணிநிமித்தம் செல்ல முனையும் நபர்களுக்கான மருத்துவப் பரிசோதனைத் தேவைகளை மிக விரைவாகவும் நம்பகத்தன்மையுடனும் பூர்த்தி செய்வதற்கு இம்மையம் வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் நோயாளர்களுக்கும், உள்ளூர் பொதுமக்களுக்கும் தேவையான மருத்துவ சேவைகளை வழங்குவதிலும் இம்மையம் முக்கிய ஆதரவாக விளங்கும் எனத் தெரிவித்தார்.

இக்கோலாகலமான திறப்பு விழாவில் சுகாதாரத் துறை சார்ந்த உயர் அதிகாரிகள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.