மன்னார் அலுவலகத்தில் திட்டமிட்ட மாற்றமா?

தமிழ் உத்தியோகத்தர்களுக்குக் கட்டாய இடமாற்றத்தால் அச்சம்.
மன்னார் மாவட்டக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தைத் திட்டமிட்டு முழுமையாகச் சிங்களமயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கடற்றொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வடக்கு மாகாணத்திலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களைச் சிங்கள உத்தியோகத்தர்கள் மூலம் நிரப்பும் நடவடிக்கை தற்போதைய ஆட்சிக்காலத்தில் உச்சம்பெற்றுள்ள போதிலும், மக்கள் பிரதிநிதிகளோ அல்லது அதிகாரிகளோ இது குறித்துக் குரல் எழுப்பவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
வடக்கு மாகாணத்திலேயே அதிகளவில் சிங்களமயமாக்கப்படும் முதலாவது அலுவலகமாக மன்னார் கடற்றொழில் அலுவலகம் திகழ்கின்றது. அங்கு அனைத்துத் தரங்களிலுமாக 8 உத்தியோகத்தர்கள் மட்டுமே பணியில் இருந்த நிலையில், புதிதாக 10 உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்ட 10 பேரில் 8 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் ஆவர். இதன் மூலம் அலுவலகத்தில் தமிழ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 10 ஆகவும், சிங்கள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 8 ஆகவும் மாறியது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே, பணியில் இருந்த 10 தமிழ் உத்தியோகத்தர்களில் 4 பேருக்கு நேற்று திடீரெனக் கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், மன்னார் கடற்றொழில் அலுவலகத்தில் தமிழ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைந்துள்ளதுடன், சிங்கள உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, மன்னார் கடற்றொழில் திணைக்களம் விரைவில் முழுமையாகச் சிங்களமயமாக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் பிராந்திய மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
மன்னாரில் அண்மையில் இடம்பெற்ற கடலட்டை ஏலத்தின்போது, உதவிப் பணிப்பாளருடன் இணைந்து பணியாற்றியவர்கள் என்ற காரணத்தினாலேயே இந்த 4 தமிழ் உத்தியோகத்தர்களுக்கும் பழிவாங்கும் நோக்கில் கட்டாய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால், இது திட்டமிட்ட நடவடிக்கையா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.
இடமாற்றம் வழங்கப்பட்ட தமிழ் உத்தியோகத்தர்களில் ஒருவர் 58 வயதுடையவர் என்பதைக்கூட நிர்வாகம் கருத்தில் கொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. மேலும், எஞ்சியுள்ள 6 தமிழ் உத்தியோகத்தர்களில் இருவர் எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் வருடாந்த இடமாற்றம் பெற்று செல்லவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டமானது கடற்றொழிலில் அதிக நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் கொண்ட பிராந்தியமாக உள்ள நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் இவ்வாறான மாற்றங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டத்தின் முன்னோடியோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
இதேவேளை, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டக் கடற்றொழில் அலுவலகங்களிலும் ஏற்கனவே இரு சிங்கள ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், தற்போது தலா 4 புதிய சிங்கள உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments 0
Be the first to comment.