—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இலங்கைப் படகுகளுக்கு இந்தியாவில் தஞ்சம்

இலங்கைப் படகுகளுக்கு இந்தியாவில் தஞ்சம்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயலால் ஏற்பட்டுள்ள அபாயகரமான காலநிலைச் சூழலில், இந்தியக் கடற்பரப்பில் பாதுகாப்பாகத் தஞ்சமடைவதற்கு சுமார் 25 இலங்கை பலநாள் மீன்பிடிப் படகுகளுக்கு அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கடற்றொழில் அமைச்சு, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இந்திய அரசிடம் விடுத்த விசேட இராஜதந்திரக் கோரிக்கைக்கு அமையவே இந்த அவசர அனுமதி பெறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, ‘அர்னாப்’ புயல் நாளை (28) புதன்கிழமை இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கடலோரப் பகுதியினூடாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், வட அகலாங்கு 10° முதல் 20° வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80° முதல் 95° வரையிலும் அமைந்துள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 80 முதல் 140 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கடல் அலைகள் 3 முதல் 4 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதால், குறித்த கடற்பகுதிகளுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு மீன்பிடிச் சமூகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் சுமார் 25 இலங்கை பலநாள் மீன்பிடிப் படகுகள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், அவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தீவிரமடைந்துள்ள புயல் காரணமாக, இந்தப் படகுகள் மீண்டும் இலங்கையை நோக்கிப் பாதுகாப்பாகப் பயணிப்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு, மீனவர்களின் உயிர்ப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைச்சு உடனடி நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இதன்படி, ஆபத்தான வானிலை மண்டலத்திலிருந்து வெளியேறித் தற்காலிகமாகப் பாதுகாப்புப் பெறுவதற்காக, குறித்த படகுகள் இந்தியக் கடற்பரப்புக்குள் நுழைய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

பாதிப்புக்குள்ளாகக்கூடிய கடற்பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறு அந்தப் படகுகளுக்கு வானொலித் தொடர்பு மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடற்பகுதிகளில் உள்ள அனைத்துப் படகுகளின் உரிமையாளர்களுக்கும், தற்போதைய சூழ்நிலையில் பின்பற்ற வேண்டிய அவசரகால நடைமுறைகள் தொடர்பில் கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

எதிர்வரும் நாள்களில் வெளியிடப்படும் காலநிலை அறிக்கைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைத் தவறாது பின்பற்றுமாறும் மீன்பிடிச் சமூகத்திடம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.