மயிலத்தமடு காணி அபகரிப்புக்கு எதிராகப் போராட்டம்

வடக்கு, கிழக்கில் எல்லைக் கிராமங்கள் சூறையாடப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாகவே மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் காணி அபகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ள தாயக செயலணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இ. செல்வகுமார், இதற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்துக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மயிலத்தமடு, மாதவனை கால்நடைப் பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்துக்கு தாயகக் கட்சி தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியானது காலங்காலமாகத் தமிழ் மக்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்குப் பயன்படுத்தி வந்த பகுதி எனவும், அங்கு கடந்த ஐந்து வருடங்களாகப் பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்வதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சிக் கால அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் பல்வேறு தீர்மானங்களை மேற்கொண்டுள்ள போதிலும், நீதிமன்றக் கட்டளைகள் மற்றும் தீர்ப்புகள் இருந்தும் அவற்றை நடைமுறைப்படுத்தாமல் செயற்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
தமிழர்களின் பூர்வீக நிலங்களும் எல்லைக் கிராமங்களும் அழிக்கப்பட்டதன் அடையாளமாகவே மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் அத்துமீறிப் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோரின் வருகையையும் அவர்களின் நடவடிக்கைகளையும் தாம் பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரைக் காணிகள் அபகரிக்கப்படுவதும், கால்நடைகள் அழிக்கப்படுவதும் ஒரு இனத்தை அழிப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் அடையாளமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண சபையின் இறுதிக் காலப்பகுதியில், மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக 10,000 ஹெக்டேர் காணிகளை வழங்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அமைச்சரவை அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், அமைச்சரவை அங்கீகாரம் கிடைப்பதற்கு முன்னரே கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
பின்னர், குறித்த 10,000 ஹெக்டேர் காணி தொடர்பான தீர்மானம் 3,000 ஏக்கராகக் குறைக்கப்பட்டு, இறுதியில் ஜனாதிபதி மட்டக்களப்புக்கு விஜயம் செய்தபோது 1,700 ஏக்கர் காணிகளை வழங்குவது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், அந்தத் தீர்மானத்துக்குப் பின்னரும் பண்ணையாளர்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், இன்று தொடரவுள்ள போராட்டம் வெற்றியடைய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் மட்டுமன்றி, தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்படும் நிலைமையை உணர்ந்து, தமிழ் தேசியத்தை நேசிக்கும் அனைவரும் போராட்டக் களத்துக்கு வருகை தந்து போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் எனவும் இ. செல்வகுமார் வேண்டுகோள் விடுத்தார்.

Comments 0
Be the first to comment.