—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து கள ஆய்வு

மலையக மீள்கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், 2026 ஒக்டோபர் 20ஆம் திகதி, 2025 நவம்பர் மாதம் ஏற்பட்ட டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்தின் ரக்ஷாவ, அலுகொல்ல, பரணகல தோட்டங்கள் மற்றும் சாலியபுர தனியார் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மலையக சமூகத்தின் சமூகமட்டத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியினர், பேரிடர் ஏற்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்றுவரை தற்காலிகக் கூடாரங்களில் மிகவும் துன்பகரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றமை சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளை, அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட வாடகை வீடுகளில் குடியமர்த்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் பல்வேறு சிக்கல்கள், 50 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத் திட்டத்தின் நன்மைகள் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையாமை மற்றும் அவர்களுக்குக் காணிகளை வழங்குவதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) வழங்கப்படும் முரண்பாடான அறிக்கைகள், மலையக மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் பாதுகாப்பான வாழ்விடங்களைப் பெற்றுக்கொள்ளும் முயற்சிகளுக்குப் பெரும் தடையாக அமைவதாகவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாகவும் சமூகமட்டத் தலைவர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய வாழ்க்கை நிலைமைகளை ஆராயும்போது, அவர்கள் இன்னமும் எதிர்கொண்டு வரும் துயரங்களும் நிச்சயமற்ற எதிர்காலமும் மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பேரிடருக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணம், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வுக்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்திருந்தாலும், அவற்றின் பயன்கள் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்பார்த்த அளவில் சென்றடையவில்லை என்பது இக்கலந்துரையாடலின் ஊடாகத் தெளிவாக வெளிப்பட்டது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் உண்மையான தேவைகளையும் நிலைமைகளையும் கருத்திற்கொண்டு, பாதுகாப்பான நிரந்தர வீடுகள், உரிய காணி உரிமைகள், வாழ்வாதார மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கம் உடனடியானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.

இந்தக் கள ஆய்வு மற்றும் கலந்துரையாடல்களைப் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு (VOPP) ஒருங்கிணைத்ததுடன், சுயசக்தி நிறுவனம் கள ஏற்பாடுகளை முன்னெடுத்தது.

இக்கலந்துரையாடலில் பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் அன்டனி ஜேசுதாஸன், சுயசக்தி அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் அழகர் செல்வராஜு, VOPP அமைப்பின் திட்ட இயக்குநர் லவீனா ஹஸந்தி, தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் வி. பிரியதர்ஷினி மற்றும் அறம் அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் கோபிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.