—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மின்சார முறிவால் பேரிழப்பு

மின்சார முறிவால் பேரிழப்பு

அரசின் அலட்சியப் போக்கினால் தேசிய மின்சாரக் கட்டமைப்பு மீண்டும் ஒருமுறை செயலிழந்துள்ளதாகவும், இதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது.

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (22) வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த திவுலப்பிட்டிய இணை அமைப்பாளர் சங்க அபயவர்தன இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு பெப்ரவரி 9ஆம் திகதி ஏற்பட்ட மின்சாரத் தடையால் நாட்டிற்கு 8.4 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து, குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், இவ்வாறான மின்சாரக் கட்டமைப்பு முறிவுகளைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், கடந்த சனிக்கிழமையும் மின்சாரக் கட்டமைப்பு மீண்டும் செயலிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேசிய முறைமை முகாமையாளர் 2024 நவம்பர் 12ஆம் திகதி வழங்கிய கடிதத்தில், பாதுகாப்பு அமைப்புகளைப் புதுப்பித்தல், பகல் நேரத்தில் சூரிய மின்சக்திப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான கட்டண முறைகளை உருவாக்குதல் மற்றும் சூரிய ஆற்றலைச் சேமிப்பதற்கான மின்கல அமைப்புகளை நிறுவுதல் உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால், அரசாங்கம் அந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் புறக்கணித்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.

டீசல் மாஃபியாவைத் தொடர்வதற்காகவே கடந்த சனிக்கிழமையும் மின்சாரக் கட்டமைப்பு முறிவடைய அனுமதிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததால் நாட்டிற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக அதிக செலவில் டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தினசரி டீசல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு 30 முதல் 35 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேல் கொத்மலை மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே மின்சாரக் கட்டமைப்பு முறிவுக்குக் காரணம் என மின்சார அமைச்சர் கூறியிருந்தாலும், நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தின் 187 மெகாவாட் திறனில் இயங்கிய முதலாவது விசையாழி செயலிழந்ததே உண்மையான காரணம் எனத் தெரியவருவதாக சங்க அபயவர்தன தெரிவித்தார். அன்றைய தினம் அந்த மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகளும் நடைபெற்று வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் நாட்டின் ஒட்டுமொத்த மின்சாரக் கட்டமைப்பும் இரண்டாவது முறையாக முடங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ரூ. 14, ரூ. 20 மற்றும் ரூ. 27 போன்ற குறைந்த விலைகளில் சூரிய மின்சாரத்தைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருந்தபோதிலும், அதிக விலையில் டீசல் மின்சாரத்தைப் பெறுவதற்கு தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதிக மின்சாரக் கட்டணங்கள் காரணமாக முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருவதாகவும், இதனால் தேசியப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு 200 பில்லியன் ரூபாயைத் தாண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்கால் குறைப்பதாக அளித்த வாக்குறுதியை மீறி, அரசாங்கம் கட்டணத்தை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். நாட்டில் மின் விநியோகமும் சீராக இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்படும் எல் நினோ வறண்ட வானிலையைப் பயன்படுத்தி, அவசர மின் கொள்முதல் மூலம் முறைகேடுகளில் ஈடுபட அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மக்களின் பிரச்சினைகளுக்கும் மின்சாரப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்குப் பதிலாக, ஜனாதிபதி தனது தனிப்பட்ட சர்வாதிகார ஆட்சியை நிறுவும் திட்டத்திற்காக நாட்டின் மின்சாரக் கட்டமைப்பைக் கடத்தல்காரர்களுக்குப் பலிகொடுக்கும் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், சூரிய மின்சக்தித் திட்டங்களை முடக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.