மின்னல் தாக்கி 5 வீடுகள் சேதம்
மன்னார் மாவட்டம், சாந்திபுரம் கிராமத்தில் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் ஐந்து வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் இந்த இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், கூரையின் பகுதிகள் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளன.
மேலும், வீடுகளில் இருந்த மின்சார உபகரணங்களும் செயலிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த குடும்பங்களின் வீடுகளுக்கும் உடைமைகளுக்கும் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் மற்றும் சாந்திபுரம் கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட வீடுகளைப் பார்வையிட்டுள்ளனர்.
நள்ளிரவில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தினால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சேத விபரங்கள் தொடர்பான மேலதிக தகவல்களையும் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பல பகுதிகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது.
மழையால் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அதிகாரிகள் உரிய பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.