திருக்கோவிலில் தோட்டாக்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம அலுவலர் பிரிவில், பழைய விசேட அதிரடிப்படை உணவகத்திற்கு முன்பாக உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து ரி-56 ரகத் தோட்டாக்கூடுகளும் இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்ற திருக்கோவில் பொலிஸார், குறித்த கிணற்றிலிருந்து ஆயுதங்களையும் அவற்றின் பாகங்களையும் மீட்டெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட பொருட்களின் விபரம்:
- ரி-56 ரகத் தோட்டாக்கூடுகள் – 09
- போல்ட்கள் மற்றும் ஏனைய பாகங்களுடன் கூடிய ரி-56 துப்பாக்கிப் பாகங்கள் – 03
- இலகுரக இயந்திரத் துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் தோட்டாக்கூடுகள் – 06
உயர் பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டலில் விசாரணை
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அம்பாறை–மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல ஆகியோரின் உத்தரவின் பேரிலும், அம்பாறை பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சியின் நேரடி வழிகாட்டலிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் தந்தராயணவின் மேற்பார்வையில், திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லலிந்த பீரிஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினர், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.