—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மேய்ச்சல் தரைக்காக மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்! பண்ணையாளர்களுக்கு ஆதரவாகத் திரண்ட மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களுக்கு உரிய நீதியைத் தற்போதைய அரசாங்கமும் பொலிஸாரும் நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தி, இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு (கச்சேரி) முன்பாக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பதாகைகளை ஏந்தியவாறு முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தின்போது, மாவட்ட செயலகத்தைச் சூழப் பொலிஸார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், இ. சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன், சீ. யோகேஸ்வரன், செ. கஜேந்திரன், அலிஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், பொதுமக்கள், வடக்கு மாகாணத்திலிருந்து வருகை தந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்திலிருந்து வருகை தந்த சிங்கள மக்களும் கலந்துகொண்டு பண்ணையாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாகத் திரண்டு தமது கண்டனங்களை வெளிப்படுத்தினர்.

"மக்களின் கோரிக்கைக்குத் தீர்வு தர வேண்டும்", "பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே", "வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்", "அபிவிருத்திக் குழுவின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்து", "மேய்ச்சல் தரை நிலம் எமக்கு வேண்டும்", "சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை வெளியேற்று", "மகாவலியே வெளியேறு" போன்ற கோஷங்களை எழுப்பி தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களால் பண்ணையாளர்களுக்கும் அவர்களின் பசுக்களுக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு வருவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின்போது பண்ணையாளர்கள் ஏழு பேரை மாத்திரம் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் அழைத்துக் கலந்துரையாடினார்.

எனினும், அரச அதிபருடனான கலந்துரையாடல் தமக்குத் திருப்தியளிக்கவில்லை எனச் சந்திப்பில் கலந்துகொண்டு திரும்பிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், மயிலத்தமடு - மாதவனை மேய்ச்சல் தரைப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை வழிநடத்திய 11 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகச் செயற்பாட்டு ஒன்றியத்தின் இணைப்பாளர் அருட்பணி லுக்ரோன் அடிகளார் தெரிவித்தார்.

தனக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத், சிவில் சமூகச் செயற்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் சிவயோகநாதன், பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன் மற்றும் விவசாயிகள் சம்மேளனத் தலைவர் மோகன் உள்ளிட்டோருக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நீதிமன்றத் தடை உத்தரவைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.