யானைகளால் உயிருக்கு ஆபத்து – வேலி அமைக்க மக்கள் கோரிக்கை
யானைகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதாரச் செயற்பாடுகளும் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த துணுக்காய் பிரதேச மக்கள், தமது பகுதிகளில் யானை வேலிகளை விரைவாக அமைத்துத் தருமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரனும் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான்குளம், ஐயங்கன்குளம், தேறாங்கண்டல், பாரதிநகர், புகழேந்திநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று (22.10.2026) வியாழக்கிழமை களப்பயணம் மேற்கொண்டனர்.
இதன்போது, அப்பகுதி மக்களின் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பில் நேரில் கேட்டறிந்தனர்.
வீதிகள் மற்றும் பாடசாலைகளின் தேவைகள்
வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்டு வரும் துணுக்காய்–தென்னியன்குளம் வீதியை ஆளுநர் பார்வையிட்டார். வீதிப் புனரமைப்புப் பணிகள் விரைவில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஐயங்கன்குளம் மகா வித்தியாலயத்தில் சுற்றுவேலி அமைத்தல் மற்றும் மண்டபம் நிர்மாணித்தல் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
தேறாங்கண்டல் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் நிலவும் சில பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், உயர்தர வகுப்புகளையும் ஆரம்பிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
யோகபுரம் மகா வித்தியாலயத்துக்குச் சென்ற ஆளுநரிடம், மாணவர்களுக்கான விடுதி வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் பாடசாலைக்குச் செல்லும் வீதியை அகலப்படுத்துதல் உள்ளிட்ட தேவைகள் எடுத்துரைக்கப்பட்டன.
சுகாதார வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
ஐயங்கன்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பார்வையிட்ட ஆளுநர், 2005ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட கட்டடத்தின் பல பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளமையை நேரில் அவதானித்தார்.
குறித்த மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும் எனப் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர். பழுதுபார்ப்புக்காக அனுப்பப்பட்ட மருத்துவமனையின் நோயாளர் காவு வண்டி விரைவில் மீளக் கிடைக்கும் எனப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
தொடர்ந்து மல்லாவி ஆதார மருத்துவமனைக்குச் சென்ற ஆளுநர், நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடினார்.
மருத்துவ நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குருதி வங்கி, வெளிநோயாளர் சேவைகள் மற்றும் சத்திரசிகிச்சை நிலையம் ஆகியவற்றுக்கான கட்டட வசதிகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் இதன்போது எடுத்துரைக்கப்பட்டது.
விவசாயம் மற்றும் கிராமிய உட்கட்டமைப்பு
பாரதிநகர் கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கான புதிய கட்டடத்தை அமைத்தல் மற்றும் நெல் உலர்த்தும் தளத்தைப் புனரமைத்தல் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அயல் கிராமத்தில் ‘பிரஜாசக்தி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள நெல் உலர்த்தும் இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
புகழேந்திநகரில் மயானம் தொடர்பாக நிலவும் பிரச்சினையை ஆளுநர் நேரில் பார்வையிட்டதுடன், அப்பகுதி மக்களுடனும் கலந்துரையாடினார்.
இந்தக் களப்பயணத்தில் அமைச்சுக்களின் செயலாளர்கள், துணுக்காய் பிரதேச செயலாளர், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Comments 0
Be the first to comment.